பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

25 Sept 2010

முட்டையைத் தள்ளுங்க! ஜீவகாரண்யத்தை பாருங்க!


பங்காளி! மனித நாகரீகமாம்! ரொம்ப உயர்ந்த நாகரீகமாம்!


தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?


வள்ளுவரு நமக்குச் சொன்னது பங்காளி! உன் உடம்பை வளர்கிறதுக்காக மத்த ஜீவன்களோட உசிரை வாங்காதேன்னு சொல்றாரு! அப்படி மத்த ஜீவன்களோட மாமிசத்தை தின்னு உன் உடலை வளர்த்தா, தர்மம் எங்கே இருக்கப்போகுது சொல்லுன்னு ஸ்டார்ங்கா கேட்குறாருப்பா!

மனுஷங்க ராஷசக் கூட்டங்களா மாறி கும்பல் கும்பலா திறியறாங்கப்பா! என்னது மனுஷங்க ராஷசக் கூட்டமான்னு ஏன் கோபப்படற? உண்மை தான் சொன்னேன் பங்காளி.

நான் சொலறதக் கேட்டப்பின்னாடி, நீயே சொல்லு! சின்ன சின்ன இரும்புக் கூண்டுக்குள்ள, ஐந்தில இருந்துப் பத்து கோழிகளை அடைச்சு வைச்சிருக்காங்க. அதுங்க வாழ்நாள் முழுசும் நின்ற நிலையிலேயே தங்களோட ரக்கைங்களக் கூட விரிக்க முடியாதபடி ஒரு இறுக்கமான நிலையில அடைச்சி வைச்சிருக்காங்க. 

நினைச்சிப் பாரு! அதுங்க முட்டைங்க இடற காலம் 18ல இருந்து 20 மாசம் வரைக்குமாம். அதுக்குப்பின்னாடி, அதுங்களோட பயன் தீர்ந்தப்பின்னாடி கொலைச் செய்யப்படவேண்டியது தான்.

ஆனா அந்த 18 மாசமும் நின்னபடியே இருக்கணும்னா எப்படி இருக்கும் சொல்லு? அதைவிட கொலைச்செய்யப்படுறது எவ்வளவோ மேல் இல்லையா? இப்படி நரக வேதனை தினம் அனுபவிக்கிறதுக்குப் பதிலா கொலைச் செய்யப்பட்டா கூடப் பரவாயில்லைன்னு தான் அதுங்க மனசுக்குள்ள வேண்டிக்கும் இல்லையா?

காத்துப் புகாத கூடங்கள்ல ஒரு லட்சத்துக்கும் மேலே கோழிகளை வைச்சிருக்காங்க. இப்படி அடைச்சி வைச்சிருகிறதால அதுங்க ரக்கையெல்லாம் உதிர்ந்துப்போகுது, அதுங்க இயற்கையா செய்ற மண்ணை கிளறி விடறது, மண்ணில புரல்றதுன்னு, தங்களோட ரக்கைங்களை நீவி, சுத்தம் செய்றதுன்னு, எந்த செயலையும் செய்ய விடுறதில்ல. இந்த நெரிச்சலான சூழ்நிலையால பலக் கோழிங்க மிதிப்பட்டே செத்துப்போதுங்க. நோய் தொற்றி இறந்துப்போறது, அடிக்கடி நடக்குதுப்பா! 



இப்போ சொல்லப்போறது இன்னும் ரொம்பக் கொடுமை! தெரியுமா? கோழிகள் நெருக்கமா அருகருகே இருக்கிறதால, ஒன்னு இன்னொன்னை கொத்திக் காயப்படுத்திக்காம இருக்கிறதுக்கு அதுங்களோட மூக்குகளை உடைக்குறாங்கப்பா, இதுக்கு De-beaking -ன்னு பேராம். அதுவும் எப்படி? எந்த ஒரு மயக்கமருந்தும் கொடுக்காமலே. கற்பனைப் பண்ணிப்பாரு! அந்த கொடுமை எப்படி இருக்கும்னு. அதுங்களுக்கு நீங்காத துன்பமா இது அமைஞ்சுடுது.

இங்கே கீழே இணைச்சிருக்கிற வீடியோவைத் தான் கொஞ்சம் பாரு பங்காளி! உனக்கே உண்மைத் தெரியும்!



வீடியோ படம் எப்படி இருக்கு! பார்கவே பயங்கரமா இருக்குல்ல. 

வருஷம் பூராவும் முட்டை இடுகிற மாதிரி ஒளியையும், வெப்பத்தையும் கூடங்கள்ல செயற்கையா பாய்ச்சுறாங்க. கோழிகளுக்கு எப்பவுமே கோடைக்காலமா தெரியணும்ங்கிறதுக்காக இந்த ஏற்பாடு. 

தொடர்ந்து முட்டைகளை இடுறதால, அதுங்க எலும்புங்க எல்லாம் பலமில்லாம உடைஞ்சிப்போகுது.  Osteoporosis நோய் அதுங்களை தாக்குது. அதுங்களைப் பார்க்குறதுக்கேப் பரிதாபமா இருக்கு. நோய்வாய் பட்டு சீக்கிரமா செத்துப்போகுதுங்க.


மேல இருக்கிற வீடியோவையும் பாரு பங்காளி! 

இப்போ ஜீவகாரண்யத்தைப் பத்தி சொன்னேன் இல்ல. யோசிச்சிப் பாரு! இப்படி மத்த ஜீவன்களைக் கஷ்டப்படுத்தித் தான் நாம உயிர் வாழணுமான்னு நிதானமா யோசிச்சிப் பாரு!

நல்ல முடிவு எடுப்பேன்னு நம்புறேன். சீக்கிரமா அடுத்த முறை சந்திப்போம். வரேன்! வீட்டிலே எல்லோரையும் கேட்டதா சொல்லு!  

24 Sept 2010

காமன் வெல்த் Games-ம் Common Man கந்தசாமியும்!

"அண்ணே முனுசாமி அண்ணே! இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டீங்களா?"

"
அட வாப்பா கந்தசாமி! எப்படி இருக்கே? எந்த விஷயத்தைக் கேள்விப்பட்டீங்களான்னு கேட்கிறா? எதைப்பத்தி சொல்ற?

"
காமன் வெல்த் Games பத்தி தான் அண்ணே சொல்றேன்! இந்தியா, அமோகமா காமன் வெல்த் போட்டிகள்ல, அதிக தங்க மெடல்களை வாங்கி குவிச்சிடுச்சாமே!"

காமன் வெல்த் தெய்வம் -1

"அப்படியா சங்கதி! எனக்குத் தெரியாதே! விஷயம் என்னான்னு தான் விவரமா சொல்லேன்."

“அதாவது அண்ணே! காமன் வெல்த் போட்டிகள்ல நடந்த கூத்தெல்லாம் பாத்திட்டு, போட்டிகள்ல, பங்கு பெற்றதுக்கு மத்த நாட்டு விளையாட்டு வீரர்கலெல்லாம் வர்றதுக்கு பயந்தாங்க இல்ல? அதனால தான் நம்ப நாட்டுக்கு கிடைச்சிருக்கு லக்கிப் ப்ரைஸ்!

“யாருமே கலந்துக்கல என்கிறதால, இந்தியா வீரர்கள் மட்டும் தானே மீதி எஞ்சி இருந்தாங்க! இப்போ புரியுதா அண்ணே? ஏன் இந்தியா, போட்டிகள்ல, அதிகமா தங்க மெடல்களா வாங்கி குவிச்சிட்டாங்கன்னு.”

காமன் வெல்த் தெய்வம் - 2

“அண்ணே! அது மட்டும் இல்ல! யாரும் வெளியல இருந்து வராததால காமன் வெல்த் கேம்ஸ்சையே, நேஷனல் கேம்ஸ்சா அறிவிச்சிட்டாங்களாம். அதனால மொத்தமா இந்தியா இத்தனை மெடல்களை ஜெயிசதுன்னு பேருக்கு சொல்லிகலாமாம்.”

“அது மட்டும் இல்லாம, தமிழ்நாடு இத்தனை மெடல்கள் ஜெயிச்சது, ஆந்திரா இத்தனை மெடல்கள் ஜெயிச்சது, கர்நாடகா இத்தனை மெடல்கள் ஜெயிச்சதுன்னு, மாநில மாநிலமா தனித்தனியா பிரிச்சி அறிவிச்சி இருக்காங்க! ஒட்டுமொத்த இந்தியா நிறைய மெடல்கள் ஜெயிச்சதுன்னும் ஒரு வகையில பெருமை. 

அதே சமயத்தில, அந்த அந்த ஸ்டேட்டை சேர்ந்தவங்களுக்கும், தங்களோட ஸ்டேட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களைப் பாத்து பெருமைப் பட்டுக்கலாம். எப்படி ஒரே சமயத்தில, ஒரே கல்லுல ரெண்டு மாங்க அடிச்சிட்டாங்க இல்ல? என்ன இருந்தாலும் இந்த மாதிரி “மாத்தி யோசின்னு” சொல்ற ப்ளான்ல நம்ப நாட்டை, அடிச்சிக்க ஆளே இல்லைன்னே”

“அது சரி கந்தசாமி! எதிர்கட்சி ஆளுங்க எல்லாம் இனி சுரேஷ் கல்மாடின்னு, அவரு பேரு வெச்சிக்க கூடாது, வேணும்னா, அவரு மண்மாடின்னு பேரு வெச்சிக்கலாம்னு போராட்டம் செய்றாங்களாமே! அவர் தலைமையில கட்டி இருக்கிற கட்டிடம் எல்லாம் பீச் மணல் கோபுரம் அளவுக்குத் தான் ஸ்டார்ங்கா இருக்காமே!” 

“ஆமா அண்ணே! நம்ப நாட்டு தலைவருங்க எல்லோருக்கும் மணல் கோபுரம் கட்டி விளையாடுற குழந்தை மனசு தான் அண்ணே!" 

“இதை யோசிச்சீங்களா?” குழந்தைங்க தானே, பரிட்சை வருதுன்னு, கொஞ்சமும் பயம் இல்லாம, பரிட்சை வர்ற வரைக்கும் விளையாட்டுபுத்தியோட இருந்திட்டு, பரிட்சைக்கு முதநாள், ராத்திரியெல்லாம் கண் விழிச்சி படிச்சி பரிட்சைக்குப் போவாங்க!”

“அந்த மாதிரி, இருக்கிற காலம் எல்லாம் விட்டுட்டு, சாகும்போது சங்கரா! சங்கராங்கிற மாதிரி விளையாட்டு ஆரம்பிக்கிறதுக்கு, இன்னும் 1 வாரம் தான் இருக்குன்னு தெரிஞ்சவுடனே, பரபரப்பா எல்லா தலைவருங்களும் முண்டியடிச்சிட்டு வேலை பாத்தாங்களே. அப்போ எல்லோருக்குமே குழந்தை மனசு தானே?”

 “கந்தசாமி!இப்படி விளையாட்டை, விளையாட்டா எடுத்துகிட்டு நம்ப மானம் மரியாதை எல்லாத்தையும் சிக்ஸர் அடிச்சி கிரவுண்டுக்கு வெளியே அனுப்பிட்டாங்களேப்பா. இவனுங்களுக்கு மானம் ரோஷம் எல்லாம் இல்லையா?”

“மானமாவது! ரோஷமாவது! அதெல்லாம் பாத்தா துட்டைப் பாக்கமுடியுமா அண்ணே? இவனுங்களுக்குன்னு ஸ்பெஷல் போட்டி வைச்சா இவங்க தான் அண்ணே அதில நிறைய தங்க பதக்கமா வாங்கிட்டு வருவானுங்க!”

காமன் வெல்த் தெய்வம் -  3

 “அது என்ன போட்டின்னு கேட்கறீங்களா? அதாவது எவ்வளவு காரித்துப்பினாலும், அதைக் கண்டுக்காத மாதிரியே சிரிச்ச முகத்தோடயே, டீவியில பேட்டி கொடுக்குறானுங்களே, அதுக்கு ஒரு தங்கப் பதக்கம்”

ஊழல் செய்தா, திட்டத் தொகையில 10% ஊழல் செய்வாங்க. அதுதான் உலகம் பூரா எல்லா நாடுகள்லேயும் இருக்கிற நடைமுறை. ஆனா நம்ப ஆளுங்க 90% ஊழல் செய்றானுங்களே! அந்த திறமைக்கு ஒரு தங்கப் பதக்கம்.”

“இத்தனை விஷயம் வெளியில தெரிஞ்சாலும், திரும்ப திரும்ப எலக்ஷன்ல நின்னு ஜெயிச்சி வர்றாங்களே, இந்த விஷயத்துக்கு மட்டும், முதல் பரிசுக்கு ரெண்டு பேரயையும் ஜாயின்ட் வின்னரா அறிவிக்கணும் அண்ணே.”

“ஒன்னு எலக்ஷன்ல நின்னு ஜெயிக்கிற தலைவனுங்க. இன்னொன்னு யாரு தெரியுமாண்ணே? திரும்ப திரும்ப ஓட்டுப் போட்டு இவனுங்களை பதவிகள்ல உட்கார வைக்கிறோமே, அந்த மடை சாம்பிராணிகளா இருக்கிற நாமத்தான்! எப்படியோ சின்ன சின்ன நாடெல்லாம் கூட நம்பளை பாத்து சிரிப்பா சிரிக்கிற மாதிரி வைச்சிட்டானுங்க. த்தூன்னு காரித்துப்பி ரொம்பவே கேவலமா பாக்க வைச்சிட்டானுங்க!

அட விடு கந்தசாமி! இவ்வளவு நடந்தப் பின்னாடியும் ஒலிம்பிக்ஸ்சை நம்ப நாட்டுல நடத்துறதுக்கு ரகசியமா பேரம் பேசிக்கிட்டு இருக்கானுங்களாமே. அந்த தில்லுக்குக் கூட ஒரு தங்கபதக்கம் கொடுக்கலாம் இவனுங்களுக்கு!

யப்பா! யோசிக்கும் போதே மயக்கம் வருதே! இந்த விஷயத்தில கூட இவனுங்க சாதிச்சாலும் சாதிப்பானுங்க! ஒன்னும் சொல்றதுக்கு இல்ல அண்ணே! இந்தியாக்காரன்னா சும்மா இல்லைன்னு ஆச்சரியபட வைச்சாலும் வைப்பானுங்க! சரி! நான் நம்ப ஜோலியைப் பாக்க கிளம்பறேன்.

உள் அமைதிக்கு உகந்த படிகள் - பாகம் 2

Peace Pilgrim - அமைதிப் பயணியை பற்றிய எல்லா பதிகளும் படிக்க இங்கே அழுத்தவும்

ஆன்மீக பாதையில் முன்னேறி செல்லும்போது, பல விதமான மனப் போராட்டங்கள், புயல்கள் எல்லாம் நேரும். முன்பே என் மனம் பக்குவபட்ட நிலையில் இருந்ததால், எனக்கு கொஞ்சம் தீவிரம் குறைந்ததாகவே அந்த புயல்கள் எல்லாம் இருந்தன. 

உங்களின் உள்ளமைதி எங்களுக்கும்
கிடைக்கட்டும் தாயே...


இந்த சுயநல நாட்டம் கொண்ட மனது மிக பயங்கரமான எதிரி. அது அதனுடைய கட்டுப்பாட்டை நிலைநிறுத்த பல விதமாக போராடுகிறது. அது பலவித வஞ்சக முறைகளில் தன்னை காத்துக்கொள்ளும் வழிகளில் இறங்குகிறது. அது உங்களின் பலவீனம் எது என்று அறிந்துக்கொண்டு, சரியான சந்தர்ப்பத்தில் உங்களை தாக்கும். இந்த வித தாக்குதல்களின் போது நாம் பொறுமையோடு இருந்து நம் ஆன்மாவின் குரலை கூர்ந்து கேட்கும் ஆற்றலை பெற வேண்டும்.

இந்த ஆன்மாவின் குரலுக்கு பல அற்புதமான பெயர்களை நமது மதபெரியவர்கள் இட்டு இருக்கிறார்கள். சிலர், the higher governing power, the inner light, or the indwelling Christ என்கிறார்கள். இயேசு பிரான், "The Kingdom of God is within you" என்று சொன்ன போது, அவர், இந்த ஆன்மாவின் குரலைப் பற்றித் தான் குறிப்பிடுகின்றார்.

நான் உள் அமைதிக்கு உகந்த படிகளைப் பற்றி கூறும்போது, அதனை ஒரு கட்டத்தினுள் வைத்தே பேசுகின்றேன். உள் அமைதிக்கு, எத்தனை படிகள் என்பது அறுதியானவை அல்ல. அவரவர் அனுபவத்திற்கு ஏற்ப படிகளின் எண்ணிக்கை மாறுபடலாம். அவற்றை சுறுக்கவோ விரிக்கவோ இயலும்.

உள்முக அமைதி நோக்கிய பார்வை தான், இதில் முக்கியம். அதை எந்த வரிசையில் அமைத்துக் கொள்ளுதல் என்பது அவரவர் விருப்பம். ஒருவருக்கு இசைவான முதற்படி இன்னொருவருக்கு, கடைசிபடியாகவும் இருக்கலாம். உங்களுக்கு எது இயல்பாகவும் எளிதாகவும் உள்ளதோ அந்த வரிசையில் அமைத்துக் கொள்ளலாம். படிப்படியாக நீங்கள் அமைதியை நோக்கி அடி எடுத்து வைப்பீர்களாயின் அது உங்களை மேலே உந்தி இட்டுச் செல்லும்.

இந்த விஷயத்தில், நாம் ஒருவருக்கொருவர் நமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுவது நல்லது. யாரோ ஒருவர் உங்களை வழிநடத்திச் செல்வதாகப் பாவிக்காதீர்கள். உங்களுக்கு நீங்களே இந்த அமைதி யாத்திரையில் பங்கு பெறுவதாகப் பாவியுங்கள். உங்களிடம் இல்லாத ஒன்றை நான் உணர்த்தி, ஊக்குவிப்பதாக எண்ண வேண்டாம். அந்த விதமாக நாம் செய்யவும் முடியாது. அமைதி பணியில் நாம் நமது அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்ளுவதன் மூலம் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் ஊக்குவிப்போம்.

முதலாவதாக, என்னை தயார்படுத்திக் கொள்ளுதளின் நான் கையாள வேண்டி இருந்தவைகளைப் பற்றிக் குறிப்பிட விரும்புகின்றேன்.

முதலாவது ஆயத்தம்:

‘வாழ்வு பற்றிய சரியான கண்ணோட்டம்’ கொள்வதே எனது முதலாவது ஆயத்தமாகும். ‘எதிலும் பட்டுக்கொள்ளாமல் தப்பித்துச் செல்லும் மனப்பான்மையை கைவிடுக!’ என்பதே இதன் பொருளாகும்.

மேம்போக்காக வாழ்ந்து மேல் மட்டளவிலேயே வாழ்ந்திருப்பதைக் கைவிடுங்கள். இது போன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் மேம்போக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பின் எந்த ஒரு சுவடும் இல்லாமல் மறைந்தும் விடுகிறார்கள். அவர்கள் இத்தகு வாழ்வில் வெறும் நடைப் பிணங்களாகவே பூமியின் மீது வாழ்ந்து, எந்தவிதமான பாராட்டக்கூடிய குணங்கள் எதுவும் பெறாமலேயே வாழ்வை முடித்தும் கொள்கிறார்கள். அவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள்.

வாழ்வை நேருக்கு நேராக சந்திப்பதில் ஆர்வம் காட்டுங்கள். வாழ்வின் அடிமட்டத்திற்குச் செல்லுங்கள். அங்கு தான் வாழ்வின் பல்வேறு தன்மைகளும், உண்மை நிலைகளும் காணக்கிடைக்கின்றன. இப்பொழுது இங்கு நாம் செய்து கொண்டிருப்பது இவைகளே.

வாழ்வில் நமக்கு முன்வரும் சிக்கல்களைச் சரியான பார்வையில் காணும் மனப்பாங்கு இதில் உள்ளது. முழுக் காட்சியையும் நீங்கள் காண முடியுமேயானால், முழுக் கதையையும் நீங்கள் அறிய முடியுமேயானால், எந்த சிக்கலானாலும், ஏதோ ஒரு குறிக்கோள் இல்லாமல் வருவதில்லை என்பதையும், அவை நம்முடைய உள்முக வளர்ச்சிக்கு உதவாமல் இருப்பதில்லை என்பதையும் நீங்கள் உணர்வீர்கள். இதை உணரும் பொழுது சிக்கல் அனைத்தும் மாறுவேடத்தில் வந்த வாய்ப்புகளே என்பதை அறிவீர்கள்.

வாழ்வின் சிக்கல்களை சந்திக்காமல் இருந்தால், அவைகளால் அடித்துச் செல்லபடுபவர்களாகவும், மன அமைதி இல்லாதவர்களாகவும் இருப்பீர்கள். நம்மிடமிருக்கும் உயர்ந்த ஞானத்தின் தன்மைக்கு ஏற்ப சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதின் மூலமே உள்முக வளர்ச்சி அடைய முடிகிறது.

அடுத்து, உலகுக்கே பொதுவான சிக்கல்களை அனைவரும் ஒன்று சேர்ந்தே களைந்திடல் வேண்டும். உலக அமைதி, உலகளவில் போர் படைகளின் எண்ணிக்கையை குறைப்பது போன்ற பொதுபணிகளில் ஒருவர் தனக்குரிய பங்கைச் செலுத்தாமல் ஒதுங்கியிருப்பவர் உள் அமைதி பெறுவதில்லை. எனவே நாம் அனைவரும் இதுபோன்ற சிக்கல்களைக் கூடிச் சிந்திப்போம்; கூடிப்பேசுவோம்; கூடிச் செயல்பட்டு நல்வழி காணுவோம்.

உள்முகம் நோக்கிய பார்வையில் நீங்கள் மற்றொரு பேருண்மையை காண்பீர்கள். நீங்கள் தனிமைப்பட்டிருக்கவில்லை. பரந்த சிருஷ்டியின் அங்கம் என்பது புலனாகும். உங்களின் பிரச்சனை சமுதாயத்தின் பிரச்சனையுமாகிறது. அது கூட்டுறவை வளர்க்க உதவுகிறது. சமுதாய உறவு உருவாகிறது.


அமைதி தூதுவர் - புத்த பகவான்


பங்காளி! Peace Pilgrim இன்னமும் நமக்கு நிறைய சொல்ல இருக்காங்க... 

சொன்னது வரைக்கும், உங்களை எந்தவிதத்தில பாதிச்சதுன்னு சொல்லிட்டுப் போங்களேன் மக்கா!

23 Sept 2010

வினோத அனுபவங்கள் -1: அமைதி பயணி


Peace Pilgrim - அமைதிப் பயணியை பற்றிய எல்லா பதிகளும் படிக்க இங்கே அழுத்தவும்

அனுபவங்களை சொல்லிக்கொண்டு
இருப்பவர் - அமைதிப்பயணி

என் அமைதி பயணத்தில், சில செயல்கள், சிரமமானதாக ஒன்றும் இருக்கவில்லை. நான் உணவு இல்லாமல் இருக்கவேண்டி இருந்த தருணங்களைப் பற்றி தான் சொல்லுகிறேன். 

தொடர்ந்து 3 அல்லது 4 வேலை உணவுகளை மட்டுமே தவறவிட்டிருப்பேன். நானாக யாரிடமும் உணவு கேட்பதில்லை என்கின்ற கொள்கையை வைத்திருக்கின்றேன். யாராவது எனக்கு உணவு வழங்கினால் உண்பது இல்லையென்றால் பட்டினி இருப்பது என்பதே என் வழக்கம்! 


ஒரு முறை, அதிகபட்சமாக 3 நாட்கள் உணவு இல்லாமல் இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அந்த நேரத்தில் இயற்கை அன்னை எனக்கு உணவு அளித்தாள். அது மரத்தில் இருந்து கீழே விழுந்திருந்த ஆப்பிள்களின் ரூபத்தில். 


ஒரு முறை, பிராத்தனை கட்டுப்பாடாக 45 நாட்கள் உபவாசம் இருந்தேன். அதனால் எத்தனை நாட்கள் வரை உணவு இல்லாமல் இருக்க முடியும் என்று எனக்கு தெரியும். இப்பொதெல்லாம் என்னுடைய பிரச்சனை, எப்படி அடுத்த வேலை உணவு கிடைக்கும் என்பதல்ல. எப்படி தேவைக்கும் அதிகமாய் கிடைக்கும் உணவை, கொடுப்போரின் மனம் புண்படாமல் மறுப்பது என்பது தான். எல்லோருமே எனக்கு அதிகமாக உணவை கொடுக்கவே விரும்புகிறார்கள். அது ஏன் என்றே தெரியவில்லை!       

எனக்கு, தூக்கம் இல்லாமல் இருப்பது மிகவும் கஷ்டமான செயலாகும். அதிகபட்சம் ஒரு இரவு வேண்டுமானால் தூக்கம் இல்லாமல் இருந்திடுவேன். அதைப்பற்றி பெரியதாக அலட்டிக் கொள்ளமாட்டேன்.

சில நேரங்களில் என் கட்டுப்பாட்டை மீறி, தூக்கம் இல்லாதபடி சூழ்நிலைகள் அமைந்துவிடுகின்றன. ஒரு முறை சரக்கு லாரிகள் நிறுத்தப்படும் இடத்தில், தூங்குவதற்காக சென்றிருந்தேன். அங்கிருந்த லாரி ஓட்டுனர் ஒருவர் நான் நுழைந்ததும், என்னை டி.வியில் பார்த்திருந்தாராம்; அதனால் எனக்கு உணவு வாங்கிக் கொடுத்து பேசிக் கொண்டிருந்தார்.

பின் ஒருவர் பின் ஒருவராக பல லாரி டிரைவர்கள் என்னை சுற்றி நின்றுக் கொண்டு அடுக்கடுக்காக, உள்ளத்தில் அமைதியை வளர்பது எப்படி என்று பலவாறு கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். முழு இரவும் இப்படி அவர்களுடன் பேசிய படியே கழிந்தது. பொழுது விடிந்ததும் காலை சிற்றுண்டியை வாங்கி கொடுத்தனர். அதை உண்டப்பின் அங்கிருந்து கிளம்பினேன். 

இன்னொரு அனுபவத்தினை சொல்கிறேன் கேளுங்கள். ஒரு முறை ஒரு லாரி ஓட்டுனர் என்னிடம், "நீங்கள் ஒருமுறை டி.வியில், நமக்குள் முடிவே இல்லாத சக்தி ஊற்றெடுக்கிறது என்று சொன்னீர்கள் இல்லையா? என் அனுபவம் ஒன்றை சொல்கிறேன் கேளுங்கள்" என்று தனது அனுபவத்தினைக் கூறினார். 

"ஒரு முறை ஒரு டவுன் முழுதுமே வெள்ளத்தால் சூழ்ந்திருந்தது. முதலில் எதுவும் யாருக்கும் உதவி செய்யும் மனமெல்லாம் எனக்கு இருக்க இல்லை. ஆனால் ஏதோ ஒரு சக்தி, வெள்ளத்தால் சிக்கியுள்ளவர்களை காப்பாற்ற என்னை தூண்டியது. நானும் அந்த பணியில் ஆர்வமாகி, பலரையும் வெள்ளத்தில் இருந்து மீட்கும் பணியில் ஈடுப்பட்டேன். பசித் தூக்கம் எல்லாம் மறந்து அந்த சேவையில் என்னை நானே மறந்த நிலையில் முழுவதுமாக ஈடுபட்டேன். எனக்கு சோர்வு என்று எதுவும் ஏற்படவே இல்லை.”

“ஆனால் இப்போது, அவ்விதமான முடிவில்லாத சக்தி என்னுள் ஊற்றெடுப்பதில்லை. அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.”

நான் அவரை, "இப்போது எதன் பொருட்டு வேலை செய்கிறீர்கள்" என்றுக் கேட்டேன். அதற்கு அவர் சிறிது தயக்கத்துடன், "பணத்திற்காகத் தான்" என்று சொன்னார்.அப்படி என்றால், நீங்கள் கூறுவது சரிதான். 


"முடிவேயில்லாத சக்தி, எல்லோருக்கும், நன்மை விளைவிக்கும் செயலில் ஈடுப்பட்டால் மட்டுமே, உங்களுக்குள் ஊற்றெடுக்கும். அந்த சக்தியை அடைய வேண்டுமானால், உங்களின் சிறு எல்லையை பாதுகாக்கும் சுயநலச் சிந்தனையில் இருந்து வெளியே வாருங்கள். நீங்கள் உலகத்திற்கு எதைக் கொடுக்கிறீர்களோ, அது தான் பல மடங்கு பெருகி உங்களுக்கு திரும்பி வருகிறது. இது தான் இயற்கை விதியின் இரகசியம்" என்று சொன்னேன்.

அமைதி தூதுவர் - காந்தி மகாத்மா!


பங்காளி! அமைதிப் பயணி, இன்னமும் நமக்கு நிறைய சொல்ல இருக்காங்க... 

சொன்னது வரைக்கும், உங்களை எந்தவிதத்தில பாதிச்சதுன்னு சொல்லிட்டுப் போங்களேன் மக்கா!