பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

11-Sep-2010

கல்யாண சமையல் சாதம்! Acidityயோ பிரமாதம்!

என்ன ஆச்சி! ஒரே யோசனையா இருக்கீங்க போல இருக்கு? கையில என்ன, ஏதோ கல்யாண பத்திரிக்கை போல இருக்கே?

வாப்பா ராசு! ஒரே யோசனையா தான் இருக்கு! கொஞ்சம் பயமாவும் இருக்குப்பா!

ஆச்சி! இந்த மாதிரி கல்யாணத்துக்கு Chance கிடைச்சா
போகலாம் இல்லையா, நீங்க?

எதைபத்தி சொல்றீக ஆச்சி? விளக்கமா சொன்னா தானே புரியும்?

'ஆடம்பரமா கல்யாணத்தை செய்றேன்னு' ஜனங்க செய்ற அட்டகாசத்தை நினைச்சித் தான் ஒரே பயமா இருக்குப்பா! பத்திரிக்கை மேல பத்திரிக்கையா வெச்சிட்டு போறாங்க நம்ப பாசகார ஜனங்க! எல்லோருமே உறவுகாரங்க வேற! போகாம தட்டமுடியுதா சொல்லுபா?

இதில யோசனை பண்ணுறதுக்கு என்ன இருக்கு? சும்மா ஜம்முன்னு போயிட்டு வரவேண்டியது தானே ஆச்சி? என்னையெல்லாம் ஒரு மனுஷனாவே மதிச்சி யாரும் பத்திரிக்கை எதுவும் வைக்க மாட்டேங்கிறங்க. எனக்கு எவ்வளவு கவலையா இருக்கு, தெரியுமா உங்களுக்கு? நீங்க என்னாடான்னா...

சரி ராசு, நீயே சொல்லு! கல்யாண சாப்பாடுன்னு ஒன்னு போடறாங்களே கல்யாணங்கள்ல! அதை சாப்பிட்டா விளங்குமா?

மாசத்தில குறைஞ்சது 10, 12 கல்யாணங்கள்ல கலந்துக்க வேண்டியதா இருக்கு! ஆனா அங்க கொடுக்கிற சாப்பாடு எல்லாமே அசிடிட்டியை கிளப்பி விடற மாதிரியே இருக்கேப்பா!

ஒரு வேலை கேட்டரிங்காரங்களுக்கும் ஜெலுசில் மாத்திரை கம்பனிகாரங்களுக்கும் ஏதாவது இரகிசிய ஒப்பந்தம் இருக்குமோன்னு கூட பல சமயத்தில சந்தேகமா இருக்கு! ஒன்னும் புரிய மாட்டெங்குது.

ஒரே சமயத்தில 15, 20 ஐயிட்டம் வைக்க வேண்டியது. எல்லா ஐயிட்டத்திலேயும் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டா கூட 4 வயிறு வேணும் போல இருக்கு, இதையெல்லாம் வேஸ்ட் பண்ணாம சாப்பிடறதுக்கு!

அது முடிஞ்சி வெளியே வந்து பாத்தா ஐஸ்கிரிம், ஃப்ரூட் சேலட்ன்னு வைக்கவேண்டியது. எல்லாத்தையும் ஒரு கைபாத்திடலாம்னு சாப்பிடறவங்களை பாத்தா எனக்கு ஆச்சரியமாவும் இருக்கு ஒரு பக்கம்! இன்னொரு பக்கம் கவலையாவும் இருக்கு!

இவங்கயெல்லாம் கடோத்கஜன் பரம்பரையோ, இல்ல ராவணனோட தம்பி கும்பகரணனுக்கு சொந்தகாரங்களோன்னு எனக்குபடுது ராசு!

சாப்பிட்ட பின்னாடி மலைபாம்பு கணக்கா ஒரு ரெண்டு, மூனு மாசம் வேற எதுவும் சாப்பிடாம, ரெஸ்ட் எடுக்க போயிடுவாங்களோன்னு பாத்தா, அதுதான் இல்ல! அடுத்து வர்ற கல்யாணத்திலேயும் இதே பார்ட்டீங்க ஆஜர். எப்படி முடியுது இவங்களாலன்னு எனக்கு புரியவே மாட்டேங்குதுப்பா!

இவங்களுக்கு, கார், பைக்ல எல்லாம் பெட்ரோல் டாங்க்ல ரிசர்வ்ன்னு ஒரு அறை வெச்சி வருமே, அதுபோல 3, 4, அறைங்களை ஸ்பெஷலா, ரிசர்வா வயித்துக்குள்ள வெச்சி கடவுள் படைச்சிட்டானோன்னு கூட தோனும்!

பேசாம இந்த மாதிரி ஃபுள் கட்டு கட்டுற பார்ட்டிங்களை எல்லாம் ஒட்டுமொத்தமா நாடு கடத்திட்டோம்னா, ஒருவேலை நாட்டில இருக்கிற உணவு பஞ்சம் எல்லாம் தீர்ந்திடுமோன்னு கூட ஒரு யோசனை மண்டைக்குள்ள ஓடுது அப்பப்போ...

ஆச்சி! நல்ல நல்ல யோசனையா வைச்சிருக்கீங்க. பேசாம உங்களை பிரதமமந்திரி சீட்ல உட்காரவைக்கலாம் போல இருக்கே! இந்த ஜனங்களுக்கு தெரியமாட்டேங்குதே!

அடபோப்பா நீ ஒன்னு! இவங்க ஆரோகியத்தை பத்தி கவலைபட்டு சொன்னாக்கா, என்னையே நீ கிண்டல் அடிக்கறியே! இவங்களுக்கு அசிடிட்டி பிராப்ளம் எல்லாம் வராதா?

ஆச்சி! அவங்க எல்லாம், வேலை செய்றதில வேணா, “கைபுள்ள கணக்கா இருக்கலாம், ஆனா சாப்பிடற விஷயத்தில எல்லோருமே “சூனா..பானாவா இருப்பாங்க! எல்லாருமே சூரபுலிங்க தான் தெரியுமா? 

ஜெலுசில் மாத்திரைகளை கிலோ கணக்கில வாங்கி ஸ்டாக் வைச்சுப்பாங்க. சாப்பிட்டு முடிச்ச கையோட பாக்கு தாம்பூலம் போடறதோடு, இந்த அசிடிட்டி மாத்திரைகளையும் சேர்த்து போட்டுப்பாங்க.

சரி அதுக்காக நீங்க ஏன் கவலைபடுணும் ஆச்சி! நீங்க வெறுமனை போய் மணமக்களை பாத்து வாழ்த்திட்டு மட்டும் வரலாமே?

அப்படி நம்பளை கண்டுகாம விட்டா தான் பரவாயில்லையே! எங்கே விடறாங்க நம்ப பாசகார உறவுகாரங்க..? நீங்க கண்டிப்பா சாப்பிட்டு தான் போகணும்னு ஒரே அடம்பிடிக்கறாங்க அப்பு! இந்த அன்பு தொல்லை இருக்கே, அது வன்முறைக்கு மேல கொடுமையானதுப்பா! அதை அனுபவிச்சி பாத்தா தான் தெரியும்!

இதில இன்னொரு விஷயம், கல்யாணதை நினைச்சே கதிகலங்கற சங்கதி என்னான்னா, லைட்ம்யூசிக்ன்னு வைச்சி மனுஷங்களை இம்சை படுத்துறாங்க பாரு ராசு! அது பெரிய டார்சர்டா! யாருடா கண்டுபிடிச்சா இந்த லைட்மியூசிக்கை? அவன் மட்டும் என் கையில மாட்டினா, மவனே அவன் சட்னிதான்!

ஆச்சி! என்னா உங்களுக்கு இம்புட்டு கோபம் வருது?

கோபம் வராதா பின்ன? என்னா ஒரு இம்சைங்கிற. ஹிட்லர் உசிரோட இருந்த காலத்தில இப்படி ஒரு விஷயம் இருக்குங்கிறதை பத்தி கேள்விபட்டிருந்தாருன்னா, அவரு Concentration Camp எல்லாம் வைச்சி, மனுஷங்களை சாகடிக்க ரொம்ப கஷடபட்டி இருந்திருக்க மாட்டாரு! இந்த லைட் ம்யூசிக் ட்ரூப்புகளை அதிகமா ஏற்படுத்தி, நாடு முழுக்க, அங்க அங்க ரொம்ப ஈஸியா ஜனங்களை சாவடிச்சி இருந்திருப்பாரு.

ராசு! இப்ப புரியுதா ஏன் நான் கவலையா இருக்கேன்னு?

எனக்கும் டவுட் தான் ஆச்சி! பத்திரிக்கை வைச்சி எல்லோரையும் கூப்பிட்டு, கல்யாணம்னு ஒரு விழா நடத்துறப்போ, எல்லா உறவுகாரங்களும், நண்பர்களும், ஒன்னா சேர்ந்து, ஆசை தீர, பேசலாம்னு வந்தாக்கா, இப்படி லைட்ம்யூசிக் ரோதனை!

யாரு பேசறதும், யார் காதிலும் விழறதில்ல. கத்தி கத்தி பேசி தொண்டையில ஒரே எரிச்சல், வலி வந்திடுது. காது ஜவ்வு எல்லாம் கிழிஞ்சிடுமோன்னு ஒரே பயமா இருக்கு! கல்யாண மண்டபத்தை விட்டு வெளியே எப்படா ஓடலாம்னு இருக்கும். மண்டபத்தை விட்டு வெளியே வந்த பின்னாடி கூட ஒரு 1 மணி நேரத்துக்கு காது சரியா கேட்கமாட்டேங்குது... காது அடைச்சிகிட்டு இருக்கும்.  

ராசு! நாட்டில எதை எதையோ தடை செய்றாங்களே! பேசாம இந்த லைட்ம்யூசிக் ட்ரூப்களை எல்லாம் தடை செய்றேன்னு எந்த கட்சியாவது சொன்னா, அவங்களுக்கு தான் என் ஓட்டு! அந்த கட்சி மெஜாரிட்டி ஓட்டு வாங்கி ஜெயிச்சிடும்னு நினைக்கிறேன்.

ஆச்சி! நான் ஒரு ஐடியா சொல்றேன் கேளுங்க! ஸ்டார்ங்கா ஒரு டிஷிஷன் எடுங்க! யாரை பத்தியும் கவலை படாதீங்க! பத்திரிக்கை கொடுக்க வர்றவங்ககிட்டே, கல்யாணத்தில இந்த மாதிரி அசிடிட்டி உணவு தான் இருக்குமா, இந்த டார்சர் தர்ற லைட்ம்யூசிக் தான் இருக்குமான்னு ஒரே கண்டிஷனா கேளுங்க.. உங்களுக்கு ஒத்து வர்ற கல்யாணங்கள்ல மட்டும் கலந்துக்கோங்க! அப்படி இல்லாத பட்சத்தில கலந்துக்க வேணாம்!

சரியாத்தான் சொல்ற ராசு! நீ சொல்றது தான் சரின்னு படுது!

மக்களே! உங்களுக்கு எது சரின்னு படுது? கீழே கருத்து பெட்டியில சொல்லிட்டு போங்க...


எல்லோருக்கும் விநாயக சதூர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றேன்

சரி, இப்போ ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லட்டா! நானும் Privilaged Gang–ல சேர்ந்தாச்சி! புரியலையா! நம்ப Followers எண்ணிக்கை  மூனு இலக்கத்தை தொட்டாசு! 

எல்லோருக்கும் நன்றிங்க! நம்ப பதிவுகளை படித்த, படிக்கும், படிக்கபோகும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி! நன்றி! நன்றீங்க... உங்க ஆதரவு தொடரணும்னு கேட்டுகிறேன்...     

10-Sep-2010

ஐயோ! எப்படி சாப்பிடணும்னு கூட சொல்லி கொடுக்கணுமா மாப்பு?

மாப்பு! என்ன ஒரு கொடுமை! சாப்பிடறது எப்படின்னு கூட சொல்லி தரணுமாப்பா உனக்கு?

பங்காளி! என்ன என்ன சாப்பிடணும்னு சொன்னே இல்ல. ஆனா எப்படி சாப்பிட்டா நல்லதுன்னு ஜனங்களுக்கு தெரிய வேணாமா? அவங்க சார்பா தான்...

போதும்! அசடு வழியாத... சரி! சொல்றேன் கவனமா கேளு!

சந்தோஷமா சாப்பிடறாங்க...கண்ணு வைக்காதிங்க!
அப்புறம் அவங்களுக்கு வயிறு வலிக்க போகுது

முதல் விஷயம் என்னான்னா... நாம குறைவா சாப்பிட்டா உணவை நாம ஜீரணிக்கிறோம்.. அதிகமா சாப்பிட்டா உணவு நம்பளை ஜீரணிச்சிடும்.

விளக்கமாவே சொல்றேனே! நாம அதிகமா வயித்தில போட்டு தினிக்காம Moderate -ஆ சாப்பிட்டோம்னா அது உடம்புக்கு நல்லது! நோய் எதுவும் இல்லாம நீண்ட நாள் குறைஞ்சது 10ல இருந்து 40 வருஷம் வரைக்கும் Extra -வா சந்தோஷமா இருக்கலாம்.

சிலரு, இல்ல.. இல்ல.. பலரும் செய்ற தப்பு என்னான்னா, மணியை பாத்து சாப்பிடறது. பசி இருக்கோ இல்லையோ, சாப்பிடற டைம் வந்தாச்சுன்னா, சாப்பாட்டு தட்டுக்கு முன்னால உட்கார வேண்டியது! இது ரொம்ப தப்பு மாப்பு!

நிறைய பேரு செய்ற இன்னொரு தப்பு ஒரே நாள்ல 4 முறை 5 முறைன்னு சாப்பிடவேண்டியது. இதுவும் பெரிய தப்பு தான்.

விஷயம் என்னான்னா, இப்படி பசியில்லாம சாப்பிட்ட உணவு, வயித்துக்குள்ளாற தங்கி தேவையில்லாம எல்லா பாகங்களுக்கும் டென்ஷன் கொடுக்கிற வில்லன்பா. முக்கியமா ஜீரண உறுப்புகளுக்கு பெரிய வேதனை தான்போ! ஏண்டா பாவி! எங்களை சும்மாவே விடமாட்டியான்னு அதுங்கெல்லாம் ஓன்னு ஒப்பாரி வெச்சி அழுவுங்க!

அப்படி உள்ளே தள்ளின உணவு, ஜீரணத்திற்கு வராமலே இருக்குதுங்கிறது மட்டும் இல்ல, அதை வெளியே தள்ளவும் முடியாம சிரமமா போயிடுது நம்ப உடம்புக்கு! சாப்பிட்ட உணவு மூலமா நமக்கு சக்தி வரணும். ஆனா அதுக்கு மாறாக, நம்ப உடம்புக்குள்ள இருந்து இந்த வீணா போன உணவை வெளியே தள்ளுறதுக்கு உடம்புக்குள்ள ஏற்கனவே இருக்கிற சக்தி செலவு ஆகுது. இப்போ புரியுதா?

இந்த தப்பு அடிக்கடி தொடர்கதை மாதிரி தொடர்ந்தா, அப்புறம் சீக்காளியா மாற வேண்டியது தான். சோக்காளியா இருந்தவன் நோயாளியா ஆவறது, பெரிய கொடுமை தானே மாப்பு?  

நான் திரும்பவும் சொல்றேன் நல்லா ஞயாபகம் வெச்சுக்கோ! கொஞ்சமா சாப்பிட்டா நாம உணவை ஜீரணிக்கிறோம். அதிகமா சாப்பிட்டா உணவு நம்பளை ஜீரணிக்க ஆரம்பிச்சிடும்! O.kay வா!

புரியுது பங்காளி! சிலரு டேஸ்டா இருக்குன்னு அளவுக்கு அதிகமா, உணவை வயித்துக்குள்ள தள்ளுறாங்களே, என்னமோ நாளைக்கே உணவு ஏதும் கிடைக்காம, பஞ்சம் வந்துடும்ங்கிற மாதிரி...!!! இது கூட தப்பு தானே?

இதில என்ன சந்தேகம்? இயற்கையே இந்த தப்புக்கு அவங்களுக்கு தண்டனை கொடுத்திடுதே! வயிற்று உப்பசம், அஜீரணம், மந்தம், வாயு தொல்லை, தலை வலி, தொந்தி விழறது, சர்கரை வியாதின்னு பல பல நோய்களை அவங்க பக்கம் அனுப்பி வைக்குதே மாப்பு!

அமெரிக்காவில நடந்த ஒரு ஆய்வுல, அதிகமா சாப்பிட்டு நோய்வாய் பட்டவங்க, தினமும் ரெண்டு வேலை மட்டும் சாப்பிட ஆரம்பிச்சதுக்கு அப்புறமா எவ்வளவோ நன்மைகள் அவங்களுக்கு கிடைச்சிருக்காம்.

அவங்களுக்கு இருந்த நோயெல்லாம் மறைஞ்சி, ஆரோகியம் நல்லபடியா கூடி இருக்கு. உடல் எடையும் ஒரு சம நிலைக்கு வந்திருக்கு, அவங்க ஜீரண உறுப்புகள் எல்லாமும் கூட நல்லபடியா வேலை செய்ய ஆரம்பிச்சிருக்காம்.

உடலுக்கு நம்மோட ஆரோகியத்தை பத்தி நிறைய விஷயங்கள் தெரியுமப்பா. அதனோட பேச்சை கேட்டாலே போதும்! எல்லா நோயிலிருந்தும் நாம விடுபட்டுவிடுவோம்.

என்ன மாப்பு நான் சொல்றது?

சரியாத்தான் சொல்றீங்க! வேற எதனாச்சும் இருக்கா மாப்பு?

ம்... இருக்கே... உணவை நல்லா மென்னு சாப்பிடணும். Express ரெயில் மாதிரி சாப்பாட்டை உள்ளே தள்ள கூடாது. ஜீரணம் வாயிலிருந்தே ஆரம்பிக்குதுன்னு உனக்கு தெரியுமா பங்காளி?

உணவை நல்லா மென்னும் போது எச்சில்ல இருக்கிற Enzymes உணவோடு சேர்ந்து ஜீரணத்துக்கு உதவி செய்யுது. அப்புறம் பல்லு எதுவும், வயித்துக்குள்ள இல்லை தானே? அதனால உணவை மாவாக்கி, கூழாக்கி, வயித்துக்கு அனுப்பணுமே தவிர அப்படியே அனுப்ப கூடாது. வயிறு பாவம் இல்ல! வாயில்லாத அப்புராணிப்பா! அதை கொடுமை படுத்தலாமா, நீயே சொல்லு?

சாப்பிடும் போது தண்ணியை குடிக்க கூடாது. இது ஏன்னா?

ஜீரணத்துக்கு தயாரா வயித்தில தீவிர நிலையில Hydrochloric அமிலம் இருக்குது. தண்ணியை குடிச்சி அந்த அமிலத்தை நீர்த்து போக செய்தோம்னா, ஜீரணம் நடப்பது பாதிப்பு அடையுது. குறைஞ்ச பச்சம் சாப்பிட்டு 30  நிமிஷம் பொறுத்து தண்ணீரை குடிக்கிறது தான் நல்லது.

அதுக்கேத்த மாதிரி காரம், உப்பு எல்லாம் குறைவா இருக்கிற மாதிரி உணவு இருக்கிறது பெட்டர்.

சாப்பிடும்போது பேச கூடாது. இதை பெரியவங்க சொல்லி கேள்விபட்டிருப்ப இல்ல! ஆனா அது எதுக்குன்னு அவங்க சொல்லல இல்லை? அதுக்கு பதிலு இது தான்!

சாப்பிடறதை நாம தியானம் மாதிரி மனசை ஒருநிலை படுத்தி சாப்பிட்டோம்னா, சாப்பாட்டு ருசியோட ஒன்றி போவோம். அதிகமாவும் சாப்பிடமாட்டோம், குறைவாகவும் சாப்பிடமாட்டோம், ஜீரண வேலை சுலபமா நடக்க உதவி செய்றோம். அது மட்டும் இல்லாம தியானம் பழகுறதும் ஈஸி!

என்னது பங்காளி இது புது கதையா இருக்கு! சாப்பட்டை வெச்சே தியானம் பழகிட முடியுமா?

மாப்பு! தியானம் என்கிறது வேற ஒன்னும் இல்ல! நாம செய்ற செயலை மனம் ஒன்றி செய்தாலே அது தியானம் தான். நீ வேணா இன்னைக்கி சாப்பிடும் போது மனசு ஒன்றி, வேற ஏதும் சிந்தனை இல்லாம, யாருகிட்டேயும் பேச்சு கொடுக்காம, சாப்பாட்டிலேயே லயிச்சி, சாப்பிட்டு பாரு! அதனோட அனுபவம் எப்படி இருந்ததுன்னு அப்புறமா சொல்லு!

கண்டிப்பா இத்தனை நாள் அனுபவிக்காத ஒரு வித்தியாசத்தை உன்னால அனுபவிக்க முடியும். 

(படிக்கும் நீங்களும் கூடத்தான்! தியானம் போல சாப்பாட்டை சாப்பிட்டு உங்களுக்கு ஏற்பட்ட அனுவங்களை எனக்கு தெரியபடுத்துங்களேன்!)

கவலையில, கோபத்தில இருக்கும் போது சாப்பாட்டை மறந்திடு! கவலையில, கோபத்தில இருக்கும்போது வயித்தில ஜீரணிக்க தேவைபடுற அமிலங்கள், Enzyme-கள் எல்லாம் சரியாக சுரப்பதில்லை.

நீ அந்த மாதிரி நேரங்கள்ல, சாப்பிடாம விட்டேன்னா, உன் உடம்பு அதுக்காக, உனக்கு தேங்க்ஸ் சொல்லும்பா தேங்க்ஸ்!

இப்போ ரொம்ப முக்கியமான ஒரு விஷயம்பா. சாப்பாடு சரியான அளவு சாப்பிட்ட உடனே ஒரு சிறிய ஏப்பம் வரும். அந்த நேரத்தில நீ சாப்பிடறதை நிறுத்தி விடுறது பெட்டர். அந்த ஏப்பம் தான் உடம்பு நமக்கு கொடுக்கிற சிக்னல். எனக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்!     

இதை படிக்கிற மக்களே! இது சம்பந்தமா, உங்களுக்கு தெரிஞ்ச மத்த விஷயங்களை என்னோடு பகிர்ந்துக்கோங்க!

உங்களுக்கு பயனுள்ள பதிவை எழுதி இருக்கிறேன்னு நம்புறேன்!

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க, கருத்தும் சொல்லுங்க

பிடிக்கலைன்னா ஓட்டு போடாதீங்க! ஏன்னு காரணத்தை மட்டும் சொல்லுங்க! அது எனக்கு ரொம்ப Use ஆகும்.

(எப்படியும் ஓட்டு போடுவீங்கன்னு தெரியும்! நீங்க தான் பாசகார உறவுகாரங்களாச்சே!!!)

நான் உங்ககிட்ட மேலே கேட்ட மாதிரி, உங்க அனுபவங்களை பகிர்ந்துகோங்க! வேற ஒரு சமயத்தில மறுபடியும் சந்திக்கிலாம்!

இப்போதைக்கு டா..டா... பை... பை... மகிழ்ச்சியோடு இருங்க!!!

09-Sep-2010

முரளியின் மரணம்! இதயநோய்க்கு தீர்வு இருக்கிறதா இல்லையா???


          நடிகர் முரளி மரணம்

அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் என்று பிரார்திக்கின்றேன்!

நண்பர்களே! நீங்களும் ஒரு நிமிடம் மவுனமாக அவருடைய ஆத்மா சாந்தி அடைய பிரார்தனை செய்ய வேண்டுகின்றேன்!

நடிகர் முரளி மாரடைப்பு நோயினால் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 46. அவருடைய உடல் இன்று தகனம் செய்யபடுகிறது.

நண்பர்களே! இது அதிர்ச்சி தரும் செய்தியாக இருக்கிறது. 46 வயதில் மரணம்.

ஒரு மனிதனின் அகால மரணம்! சாவை அணைக்கும் வயசா இது? மிகவும் துக்ககரமான ஒரு கெட்ட செய்து!

இது நம்மை சிந்திக்க வைக்கவேண்டும் என்று தான் உங்களின் கவனத்திற்கு இதனை கொண்டு வருகின்றேன்.

இதய நோய்களை பற்றி சரியான ஒரு புரிதல் நம்மிடம் இல்லை நண்பர்களே! இது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி. ஆரோகியம் நம் கையிலேயே இருக்கிறது என்கின்ற செய்தி அதிகமானோர்களுக்கு தெரியவேயில்லை.

நண்பர்களே! மாரடைப்புக்கு காரணம் நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். அதற்கு காரணம், நம் உடம்பில் சேரும் கெட்ட கொலஸ்ட்ரால் தான். மற்றவர்களுக்கு இதுபோன்ற நோய்கள் வருமே தவிர, நாம் ஒருபோதும், இதய நோய்களால் தாக்கபட மாட்டோம் என்று ஒரு நினைப்பில், நாம் சாப்பிடும் உணவில் அக்கறை இல்லாமல் இருக்கின்றோம்! இதற்கு விளைவு தான் இந்த இதய நோய்களின் பெருக்கம்!

உணவே மருந்தாகும் என்கின்ற நாகரீகத்தில் இருந்து உணவே நஞ்சாகும் என்கின்ற நாகரீகம் வரை வந்துவிட்டோம்.

நம் நாகரீகம் வேகமாக பள்ளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது!

ஒரு நண்பர் கூட, தனக்கு ஒரு முறை மாரடைப்பு வந்ததென்றும், அதற்காக என்ன செய்யவேண்டும் என்று கூறும்படியும் எழுதி கேட்டிருக்கின்றார். அவருக்காகவும் இந்த பதிவை எழுதுகின்றேன்.

உலகத்தில் இன்று, மூன்றில் ஒரு மரணம் இதய நோய்களால் நேர்கிறது. இது ஆபத்தின் அறிகுறி! மூன்றில் ஒன்று! உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதற்காக இதனை சொல்லவில்லை. உங்களை சிந்திக்க வைக்கவே சொல்கின்றேன்.

உணவில் கவனம் செலுத்துங்கள் நண்பர்களே! எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகளை மிகவும் கொஞ்சமாக சாப்பிடுங்கள்! மனம் பக்குவம் பட்டவர்கள் முற்றிலும் இவைகளை தவிர்திடுங்கள். மற்றவர்கள் அந்த பக்குவபட்ட நிலைக்கு வருவதற்கு முயற்ச்சி செய்யுங்கள்!

எண்ணெயாலே நமக்கு, என்ன என்ன சக்தி கிடைக்கிறதோ அதற்கு மாற்றை சொல்கின்றேன். கவனமாக கேளுங்கள்! கேட்டு எவை எல்லாம் உங்களின் சௌகரியத்திற்கு ஒத்துவருமோ, அவைகளை கண்டிப்பாக பின்பற்றுங்கள்! நண்பர்களே! இது உங்களின் உடல்நலனை பற்றி சிந்தித்து கொண்டிருக்கின்றோம் என்பதனை மறவாதீர்.  

எண்ணெய்க்கு மாற்றாக, தேங்காயை பச்சையாக வெல்லத்துடன் சாப்பிடுங்கள். வேற்கடலையை இரவில் ஊறவைத்து காலையில் சாப்பிடலாம். எள்ளை முளைகட்டி வெல்லம் கலந்து சாப்பிடலாம். இதனால் நமக்கு வேண்டிய எல்லா சக்தியும் கிடைக்கிறது

கொழுப்பு சத்து உள்ள உணவுகளை கண்டால், அவற்றின் ருசிக்கு மயங்கிடாதீர்கள். அவை எல்லாம் மோகினி பிசாசுகள்! அழகிகளின் முகமுடி போட்டு வந்திருக்கின்றன. நம்மை படுகுழியில் தள்ளாமல் வேறு பக்கம் நகராதவைகள். உங்களுக்கு அவை எவை என்று, நன்கு தெரியும் ஆகையால் அவைகளின் பட்டியலிட்டு சொல்லவேண்டிய தேவை இல்லை என்று நினைக்கின்றேன்.  

நீராவியில் வேகும் உணவுகள் – இட்லி, பிட்டு போன்றவை சாப்பிடலாம். எண்ணெய் சேர்காமல் Non-stick பாத்திரங்களில் சப்பாத்தி தோசை போன்றவைகளை செய்து சாப்பிடலாம்.

நார்சத்து அதிகமாய் இருக்கும் தானியங்கள், பழங்கள் – ஆரஞ்சி, பப்பாளி, அன்னாசி, வாழைபழம், போன்ற பழங்களையும், கேரட், பீட்ரூட் முள்ளங்கி, தக்காளி என்று பச்சையாக உண்ண முடிந்த எல்லா காய்கறிகளையும் கலந்து ஒரு கின்னம் அளவு தினமும் ஒரு வேலையாவது உணவுடன் சேர்த்து கொள்ளுங்கள். இரண்டு வேலைகளில் சேர்த்து கொள்ள முடிந்தால் மிகவும் நல்லது.

நெல்லிகாய், எலுமிச்சை, மாதுளம் பழம் எல்லாம் இதய நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

நீர்காய்களான, சுரக்காய், கோவைகாய், வெள்ளரி, பூசணி, புடலை எல்லாமும் கூட மிகவும் நல்லது. இவைகளையும் மிகவும் சிறியதாக அரிந்து பச்சைகாய்கறிகள் சேலட் செய்கையில் அவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். அல்லது தனி தனியாக இவைகளில் இருந்து சாறாக்கி சிறிது உப்பு, மிளகு, சீரகத் தூள் சேர்த்து சாப்பிடலாம்.

தற்போது நெஞ்சு வலி இருப்பவர்கள், தினமும், இஞ்சி துண்டை தோல் சீவி நன்கு அறைத்து, சிறிது தேன் கலந்து நாவினால் நக்கி சாப்பிடுங்கள். வலி குணமாகும்.   

பசி அறிந்து உண்ணுங்கள்! என்ன உண்கின்றீர்கள்? அவைகளில் இருக்கும் காலோரி சத்து எவ்வளவு என்று தெரிந்து உண்ணுங்கள்.

காரம், உப்பு, புளி, எண்ணெய் போன்றவைகளை எந்த அளவு உங்களின் உணவில் குறைக்க முடியுமோ, அந்த அளவு குறைத்து சாப்பிடுங்கள்.

புகை பிடித்தல், மது குடித்தல், அசைவ உணவில், மீனை தவிர எல்லாம் இதயத்திற்கு வில்லன்கள் தாம் என்று புரிந்து கொள்ளுங்கள். மீனையும் எண்ணெயில் வறுத்தீர்கள் என்றால் அதுவும் கேடு நிறைந்த உணவாக மாறிவிடும்!

ஆரோகியமாக இருக்கும் போது செய்யும் தவறுகள், நம்மை அந்த நிமிடமே ஒன்றும் செய்யாதிருக்கலாம்.

அவை கடனை வசுலிக்க சந்தர்பத்தை எதிர்பார்த்து கொண்டே காத்திருக்கின்றன நண்பர்களே! சரியான நேரத்தில், மானை துரத்தும் வேட்டை நாய்கள் போன்று நம்மை துரத்துகின்றன. அவை எப்படி மானின் கழுத்தை பிடித்து கொதறி இழுக்கின்றனவோ, அதுபோலவே இந்த நோய்கள் என்கின்ற அரக்கர்களும் நம்மை கழுத்தை பிடித்து நம் ரத்தம் குடிக்க வெறியுடன் பற்றுகின்றன.

கவலை, மன அழுத்தம், கோபம், பதட்டம், பயம் என்று மனதில் எழும் பலவித உணர்ச்சிகளும் நம் இதயத்தை தாக்குகின்றன. எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உள்ளவையே! உடலில் தோன்றும் நோய்கள் மனத்தினை பாதிக்கின்றன. அதேபோல் மனத்தில் தோன்றும் உணர்வுகள் உடல் உறுப்புகளை பாதிக்கின்றன.

உடலுக்கு வேலை கொடுங்கள் நண்பர்களே! எத்தனையோ மனிதர்களுக்கு வேர்வை சுரபியே வேலை செய்யாமல் பல வருடங்களாக பழுதுபட்டு இருக்கிறது. தினமும் 1 மணி நேரமாகிலும், நன்கு நடைபயிற்ச்சி மேற்கொள்ளுங்கள், சூரிய ஒளி குளியல், வாழையிலை குளியல், மெது ஓட்டம், யோகாசனங்கள் என்று என்ன செய்ய முடியுமோ அதனை செய்யுங்கள்.

இந்த நோய்கள் எல்லாம் நம்முடைய வாழ்க்கை முறை சீர்கேட்டால் வருபவை (Life Style Diseases).

நம் வாழ்க்கை முறையை மாற்றி கொள்வோம்! நோய்கள் வராதபடி நம்மையும் நம் குடும்பத்தாரையும், நம் நண்பர்களையும், நம் உறவுகாரர்களையும் காப்பாற்றுவோம் நண்பர்களே!

எல்லாவற்றையும் தொகுத்து சொல்வது இது தான். நோய் நம்மை வந்து தாக்கும் வரை காத்திருக்கவேண்டாம்.

"The best defence is offence" என்று சொல்வார்கள். அந்த வாக்கியத்தின் படி நோய்கள் நம்மை தாக்கும் முன்னே, நாம் முதலில் நோய்களை தாக்குவோம் நண்பர்களே!

வாருங்கள் நோய் ஏதும் இல்லா நாகரீகம் காண்போம்!!!

07-Sep-2010

அதிகமா உப்பு! அது ரொம்ப தப்பு!

தந்தனத்தோம் என்று சொல்லியே...
ஆமா வில்லில் பாட ஆமா வில்லில் பாட!
வந்தருள்வாய் கலைமகளே!

அம்மா வாங்க! ஆச்சி வாங்க! ஐயா வாங்க! தமிழ் பேசற மக்களே எல்லோரும் வாங்க!

இன்னைக்கு நாம பாக்க போற விஷயம் எதை பத்தினதுன்னா
தலைப்ப பாத்தீங்க இல்ல! அதே தான் மேட்டரு!

கோட்டருக்கு வாட்டரு குறைஞ்சாலும்
ஆட்டோ மீட்டருக்கு மேல, கொடுக்கிற காச குறைஞ்சாலும்!
டாக்டருக்கு நோயாளிங்க குறைஞ்சாலும்!
மோட்டருக்கு இஞ்சின் ஆயில் குறைஞ்சாலும்!
நம்ப மேட்டரு மட்டும், தரத்தில, குறையாது குறையாது குறையாதுங்க!

உண்மை தானுங்க! நல்லபடியா சபை நிறம்பி கலைகட்டுதுங்க!

சரி! வில்லுபாட்டு கேட்கறதுக்கு, நல்லா ஒரு  ஆச்சி வந்திருக்காக! அவங்களையே முதலில கேப்போம்! ஆச்சி! உங்க பேர பசங்க, ஃபாஸ்ட் ஃபுட், சிப்ஸ்ன்னு நிறைய நொறுக்கு தீனி சாப்பிடறாங்களே, அதை கொஞ்சம் கேட்ககூடாதா?

தம்பி கேட்கணும்னு தான் ஆசை! ஆனா எனக்கு இருக்கிற சர்கரை வியாதினால டாக்டரு வாயை கட்ட சொல்லிட்டாரு. அதனால அவங்க கிட்ட இருந்து எதுவும் கேட்டு வாங்கி திங்கறதில்ல.

ஆச்சி நீங்க தப்பா நினைச்சிகிட்டீங்க போல இருக்கு! நான் சொல்ல வந்தது, நீங்க அவங்ககிட்ட இருந்து கேட்டு வாங்கி திங்கறத பத்தி இல்ல. அந்த மாதிரி வீனா போன உணவு எல்லாத்திலேயும் அதிகமா உப்பை சேத்திருக்காங்க ஆச்சி! அதுங்களை ஏன் சாப்பிடறீங்கன்னு கேட்ககூடாதன்னு சொல்ல வந்தேன்.
அதிகமாச்சின்னா ஆபத்து ஐயாமாருங்களே!

அப்படியா தம்பி! இதைபத்தி விபரமா சொல்லுங்க! விபரம் புரியாதவ நானு! எங்க காலம் எல்லாம் எப்படியோ போயிடிச்சி! விபரம் புரியாமலேயே இத்தனை வருஷம் ஓட்டிட்டேன்! நீங்கல்லாம் படிச்ச மகராசனுங்க! நாலு விஷயம் தெரிஞ்சவங்க! இந்த உப்பு எப்படி தப்புன்னு விபரமா விளக்கி போடுங்க! நாங்க அதை கேட்டு அதன்படி நடந்துக்குறோம்.

ஆச்சி! நீங்க சரியா சொல்லிபோட்டீங்க! அந்த காலத்தில எதையுமே தெரிஞ்சிக்காமலே எல்லோரும் நோயில்லாம வழ்ந்திட்டு போயிடாக! ஆனா நாம எங்கேயோ அட்ரஸ் தப்பி போற நோய்ங்கள கூட வலுகட்டாயமா நம்ப பக்கம் இழுத்திட்டு வர்றோம். அதை பத்தி சொல்ல தான் இப்போ வந்திருக்கேன் ஆச்சி!

நம்ப தலைவரு சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்த் சொல்றாரு இல்ல தம்பி பணம் கொஞ்சமா சேர்தா அது உன்னை காப்பாத்தும்! அதே பணத்தை அதிகமா சேர்தா, அதை நீ காப்பத்தணும்.

அந்த மாதிரி தான் ஆச்சி! உப்பு கொஞ்சமா உடம்புல இருந்தா அது நல்லது. ஆரோகியத்துக்கு ரொம்ப அவசியமும் கூட. ஆனா அதுவே அதிகமா போச்சுன்னா ஆரோகியத்துக்கு பாதிப்பு!

உப்புல இருக்கிற சோடியம் தசைகளை சுருக்கி விரிக்க பயன்படுது! நரம்புகள் தகவல்களை பரிமாறிக்க பயன்படுது. ஆனா இது குறைவா இருந்தா தான் இந்த நன்மை கிடைக்குமுங்க.

ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் அதாவது ரெண்டரை கிராம் உப்பு நமக்கு தேவை படுது. ஆனா உங்க பேர பசங்க மாதிரி, இன்றைய தலைமுறைய சேர்ந்தவங்க, நிறைய உப்பு சாப்பிடற வாய்ப்பு அதிகமா இருக்குங்க

McDonolds போல இருக்கிற ஃபாஸ்ட் ஃபுட் ஹோட்டல்ல எல்லாம் French Fries, burger, Pizza, Chicken fry -ன்னு இஷ்டத்துக்கு வயித்துக்குள்ளாற தள்ளுறாங்க இல்ல?

இந்த மாதிரி குப்பை உணவு, ஆங்கிலத்தில இதுங்களை Junk food-ன்னு சொல்றாங்க ஆச்சி. இதில எல்லாம் உப்பை தாராளமா பயன்படுத்துறாங்க, இந்த படுபாவி பசங்க!

இதனால இதுகளை சாப்பிடறவங்க உடம்புல அதிகமா உப்பு சேர்ந்து பாதிப்பை உண்டாக்குது. ஒரு புள்ளி விபரம் என்ன சொல்லுதுன்னா, இந்த மாதிரி உணவு சாப்பிடறவங்க, தினமும் தங்களுக்கே தெரியாம சராசரியா 10 கிராம் வரைக்கும் கூட உப்பு சாப்பிடறாங்களாம்.

அதாவது தேவைக்கு அதிகமா 4 மடங்கு உப்பு சாப்பிடறாங்க ஆச்சி! இதனால இரத்த கொதிப்பு நோய் - அதுதான் High BP நோய் வருதாம் இல்ல. உப்பு அதிகமா இருந்ததுன்னா அது தண்ணிய உடம்புக்குள்ள அதிகமா தக்க வைக்கும்.

பலரு பாக்கவே சகிக்க முடியாத அளவுக்கு குண்டாக இருக்கிறதுக்கு இந்த மாதிரி அதிகமா உப்பு சாப்பிடறதும் ஒரு காரணம்.        

Edema - அதாவது நீர் கோத்து கைகால்லெல்லாம் ஊதி போகிற நோய். அதுக்கு காரணம் கூட இது தானுங்க. மஞ்சல் காமலை போல உப்பு காமலை நோய் வருமுங்க.

இதனால் இதய கோளாறுங்க பலவும் வருதுங்க. அதுமட்டும் இல்ல Stroke - பக்கவாதம் கூட இதனால் வருது ஆச்சி! நம்மோட Kidney எல்லாம் கூட டேமேஜ் ஆயிடுது.

இது நாமே வழியில போற நோயை விரும்பி வரவழைக்கிற மாதிரி தானே ஆச்சி!

தம்பி நீ சொல்லியாச்சி இல்ல!
இப்போ இந்த கமலா ஆச்சியோட வேலையை பாரு! (சும்மா ஒரு ரைமிங்குகாக Bold செய்திருக்கேனுங்க)

முதல் வேலையே என் பேரபசங்களை திருத்திற வேலை தான்.

கொஞ்சம் கொஞ்சமா உப்பு பயன்பாட்டை குறைச்சிடுங்க ஆச்சி! உணவு மேசை மேல இருந்து அந்த உப்பு டப்பாவை எடுத்திடுங்க. பச்சை காய்கறிங்க, பழங்களை சேத்துக்கோங்க. அவையெல்லாம் நம்ப உடம்புல இருக்கிற உப்பை கொஞ்சம் கொஞ்சமா வெளியே தள்ளி நம்ப உடம்ப ஒரு சமநிலைக்கு கொண்டுவரும். இயற்கையாவே அந்தமாதிரி பச்சைகாய்கறிங்க, பழங்களில உப்பு இருக்கு. அதனால் உப்பை குறைக்கிறது தான் நம்ப எல்லோருக்கும் நல்லது.

என்ன மக்களே! உப்பு அளவா இருக்கணும் புரிஞ்சதா. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ஆயிடுமுங்க.

(கீழே எழுதி இருக்கிறது, வில்லு பாட்டை முடிக்கிற பாட்டுங்க... அதனால எவ்வளவு கஷ்டமானாலும் பாட்டு மாதிரி படிச்சிடுங்க! பாசகாற உறவுகாரங்களே)

அதிகமா உப்பு!... அது தப்பு தானுங்க...
இதில குத்தம் குறை இருந்ததான்னு சொல்லிட்டுபோங்க
கூடவே ஓட்டும் போடுங்க
நீங்க ஓட்டு போடுங்க!
மகராசா ஓட்டு போடுங்க...

உப்பை தின்னாதால... தீமை ஆச்சி...
ஆச்சிக்கு விஷயம் நல்லா புரிஞ்சிபோச்சி...
இப்போ வில்லுபாட்டும் முடிஞ்சி போச்சி..
நம்ப வில்லுபாட்டும் முடிஞ்சி போச்சி

06-Sep-2010

அடுப்பில்லா சமையல் - பேரீச்சை முந்திரி லட்டு

அடுப்பில்லா சமையலுங்க!
ஆனந்த சமையலுங்க!

ஆர்வமா... வாங்க...!
சேர்ந்து....., சாப்பிட்டு போங்க....!
நம்மோடு நீங்க..., சாப்பிட்டு போங்க....!

எப்படிபா இருக்கே மாப்பிள? தங்கச்சி, குழந்தைங்க எல்லோரும் சௌகியம் தானே?

எல்லாம் நல்லா தான் இருக்கோம் மச்சான்! என்னது, நான் வரும்போது பாட்டு சத்தம் கேட்டதே?

அதுவா பழசேலட் சாப்பிட்டுன்னு இருந்தேனா மாப்பு! குஷியில பாட்டு தன்னால வந்தது!

சரி! விஷயத்தை சொல்லு? தங்கச்சிகிட்ட நம்ப பழ சேலட் ரெஸிபியை பத்தி சொன்னியா இல்லையா?

சொல்லாம இருப்பனா? சொன்னது மட்டும் இல்லாம, Life-லேயே முதல் முறையா சமையல் சேஞ்சி உன் தங்கச்சியை அசத்திபுட்டேன் இல்ல!

எந்த குறையும் இல்லாம, ரொம்ப டேஸ்டாவும் ஆரோகியமாவும் செஞ்சி, மொத்த குடும்பத்தையும் மலைக்க வெச்சிட்டேன் மச்சான்.

ஒரே பாராட்டு மழை தான் போ, உன் தங்கச்சி கிட்ட இருந்து! எப்படிங்க இவ்வளவு அறிவு? இத்தனை நாள் எங்க வெச்சிருந்தீங்கன்னு தலையில பெரிய ஐஸ்கட்டியா வெச்சிட்டா. எனக்கும் உச்சி குளிர்ந்து போச்சுப்பா. தேங்க்ஸ் மச்சான்.

இன்னைக்கு வேற ஒரு ஐயிட்டதை பத்தி சொல்லிகுடு மச்சான்.

அட பாவி மாப்புள! சொல்லி தந்தது நானு, பாராட்டு வாங்கறது நீயா? சரி, சரி எப்படியோ நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா சரிதான்.

அடுத்த ஐயிட்டம் தானே? சொல்றேன் கேட்டுகோ மாப்பு!

பேரீட்சை முந்திரி லட்டு நானுங்க!

இன்னைக்கி நாம பாக்க போற ஐயிட்டம் - பேரீச்சை முந்திரி லட்டு

இதுக்கு என்ன என்ன தேவைன்னு சொல்றேன். நல்லா கவனி!

முந்திரி பருப்பு  - 200 கிராம்
பாதாம் பருப்பு  - 100 கிராம்
பிஸ்தா பருப்பு  - 50 கிராம்
பேரீட்சை       - 250 கிராம் (கொட்டை நீக்கியது)
உலர் திராட்சை - 100 கிராம்
ஏலம் தூள்      - சிறிய அளவு

இதை தயாரிக்கிற முறையும் ரொம்ப சிம்பிள்! சொல்றேன் கேட்டுக்கோ!

கொட்டை இல்லாத பேரீட்சை மற்றும் உலர் திராட்சையை நல்லா தண்ணியில போட்டு கழுவிக்கணும்.

முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, எல்லாத்தையும் மிக்ஸியில போட்டு அரைச்சி அத்தோட இந்த பேரீச்சை, உலர் திராட்சையை போட்டு அரைச்சி எடுக்கணும்.

கடைசியில ஏலம் தூளையும் கலந்து லேசா அரைக்கணும். இந்த கலவை சூடா இருக்கும் போதே சின்ன சின்ன உருண்டையா பிடிக்கணும்.

மாப்பிளே! இது தான் பேரீச்சை முந்திரி லட்டு.

சாப்பிடாம குழந்தை ரமா அடம்பிடிக்கிறதா சொன்னீயே. இதை செஞ்சி கொடுத்து பாரு! அவ எப்படி சந்தோஷமா சாப்பிடறான்னு. காலைல, மாலையில டிபனா இதை குழந்தைக்கு கொடுக்கலாம்.

ஒரு வாரம் 10 நாளு வரை கூட கெடாம இருக்கும். தேங்காய் துறுவல் சேர்த்தும் செய்யலாம். தேங்காய் சீக்கிரம் கெட்டு போகும் என்கிறதால, செயதன்னைக்கே, சாப்பிட்டு காலி பண்ணிடணும்.

இந்த உணவில இருக்கிற பயன்களை பாத்தோம்னா, உடம்புக்கு தெம்பும், வேலை செய்ய நல்ல கலோரி சக்தியும் தர்ற உணவு. பசியை தாங்கிற உணவு.

விந்து பலம், ஆண்மை சக்தியை கூட்டுகிற உணவு. கபம் சம்பந்த நோயாளிகளும் சாப்பிடலாம். அவங்களுக்கு போதிய நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

வெளியில பயணம் செய்ற சமயங்கள்ல கண்டதை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காம, இதை கொண்டுபோய் சாப்பிடலாம் மாப்பு!

எண்ணெயில செய்ற லட்டை விட, இந்த இயற்கையா செய்ற லட்டு நம்ப உடம்புக்கு பல மடங்கு ஆற்றல் கொடுக்கும். எண்ணெய் லட்டு போல கெடுதல் செய்யாது

நீங்க செய்து தங்கச்சியை அசத்துங்க மாப்பிள. ஆனா மறக்காம இந்த முறையாவது நான் இந்த ரெஸ்பியை நான் சொல்லிகொடுத்ததேன்னு சொல்லு! அவளுக்கு என்மேலேயும் கொஞ்சம் மதிப்பு வரும் இல்ல.

அதுக்கென்ன தாராளமா சொல்லி போடறேன்! வர்றேன் மச்சான்.

------------------------------------------------------------
பிடிச்சிருக்கும்னு நம்பறேன். ஓட்டு போட்டுட்டு போங்க.

என் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய மக்களே! நான் சொல்லி கொள்வது என்னவென்றால்....

என்னை ஓட்டு போட்டு, ஜெயிக்க வைத்து, மந்திரி ஆக்கினீர்கள் என்றால், ஆளுக்கு 50 கிலோ பேரீட்சை முந்திரி லட்டு அனுப்பி வைப்பேன் என்று ஆனிதரமாக சொல்லிகொள்கிறேன்.

என் பாசமிகு மக்களே! உங்களை ஏமாற்ற மாட்டேன்! இது உறுதி!   

05-Sep-2010

வாங்களேன்! ஜாலியா சூரியஒளி குளியல் போடலாம்!

இலவசம்! இலவசம்! சூரியஒளி குளியல் இலவசம்! அம்மா வாங்க! ஐயா வாங்க! அண்ணா வாங்க! அக்கா வாங்க!

 என்ன பங்காளி! ஒரே கூப்பாடு பலமா போட்டுனு இருக்க...

வாங்க அப்பு! அது ஒன்னும் இல்ல சூரிய ஒளி குளியலை பத்தி நம்ப கூட்டாளிபசங்களுக்கு சொல்லலாமுன்னு கூட்டத்தை கூட்டினு இருக்கேன்பா!


ஹீரோ! என்ன அழகா சிரிக்கிறாரு! சூரியகுளியலு
இதமா இருக்கு போல... நீங்களும் ட்ரை பண்ணுங்க...


இதில சொல்றதுக்கு என்ன இருக்கு பங்காளி? நாம தான் டீவிலேயும், சினிமாவிலேயும் பாத்திருக்கேமே!

அப்போ, அதை பத்தி, எல்லாம் தெரியும்னு சொல்றே இல்ல? சரி! எங்கே சொல்லு பார்ப்போம், எப்போ சூரியஒளி குளியல் செய்யலாம்!

பங்காளி! என்ன இது சின்னபுள்ள தனமா இருக்கு...பகல்ல தான் செய்ய முடியும். கண்டிப்பா ராத்திரி நேரத்தில செய்ய முடியாது...

ஆமாம்...இந்த வீராப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல...வெட்டி பேச்சி வீராசாமி! உன்ன அப்படியே ஒன்னு போட்டன்னா... பெரிய ஐன்ஸ்டீன் கணக்கா இல்ல பதில சொல்றே...

ஒழுங்கா தெரிஞ்சா, தெரியும்னு சொல்லு... இல்லன்னா ஈகோ பாக்காம தெரியாதுன்னு ஒத்துக்கோ. பங்காளிங்க குள்ள என்ன ஈகோ பாக்கறது...

சரி தான்பா! கோபிச்சிகாத! மன்னிச்சிடு!
எல்லாம் தெரிஞ்சவரு!
நாலணாவிற்கு நல்லவரு!
கைபுள்ளைய விட வள்ளவரு!
சின்னபுள்ளைய விட திள்ளானவரு
போதுமா? நீயே சொல்லிடு.

இந்த கிண்டல் கேலிக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல உங்கிட்ட! உனக்கு அப்புறமா வெச்சிகிறேன் கச்சேரிய! சரி சும்மா இரு! கூட்டம் கூடிபோச்சு! So Be Serious!

சரிங்க தல! நீங்க உங்க பிரசங்கத்தை ஆரம்பிங்க. நான் அமைதியா கேட்டுகிறேன்.

அப்படி வா வழிக்கி...  விஷயத்தை நான் சொல்றேன்! கவனமா கேட்டுகோ... சூரியஒளிகுளியல் காலை 7 மணில இருந்து 9 மணிக்குள்ளேயும், சாயந்திரம் 4 ல இருந்து 6 மணிக்குள்ளேயும் செய்யலாம்.

நல்ல பட்டபகலில எல்லாம் போய் மொட்டைமாடியில படுக்ககூடாது... தெரிஞ்சுதா அப்பு?

20-ல இருந்து 30 நிமிஷம் சூரியஒளி குளியல் போட்டா உடம்பும், மனசும் சும்மா சூப்பர் ஸ்டாரு கணக்கா, கும்முன்னு, புத்துணர்ச்சி வந்திடும்.

சூரியஒளி குளியலுக்கு முன்னாடி நல்லா தண்ணி குடிக்கணும். அப்படி இடையில தாகம் எடுத்தாலும், பக்கத்திலேயே தண்ணிய வெச்சிட்டு குடிச்சிக்கலாம்.

சரி இவ்வளவு சொல்றியே, இதனோட பயன் என்னான்னு சொன்னா தானே நம்ப பங்காளி பசங்களுக்கு ஒரு இண்ட்ரஸ்ட் வரும் இதை செய்றதுக்கு.

ஏன் முந்திரி கொட்டை மாதிரி குதிக்கிற? நான் அதை தானே சொல்ல வந்தேன். சரி, கேட்டுக்கோ! விட்டமின் D சத்தை, நம்ப உடம்பு தயாரிக்கிறதுக்கு உதவியா இருக்கு இந்த குளியலு!

உடம்புகுள்ள இருக்கிற கொலஸ்ட்ராலை ஜீரணத்துக்கு கொண்டு வருது இது. அதனால் 15, 20% இரத்ததில இருக்கிற கொலஸ்ட்ரால் அளவு கட்டுபடுது.

அறிவியல் ஆராய்ச்சி எல்லாம் என்ன சொல்லுதுன்னா, உடற்பயிற்ச்சி செய்தா என்ன பலன் கிடைக்குமோ அது  
இந்த சூரியஒளியில கிடைக்குதாம்பா! இரத்த அழுத்தம் குறையுது, இதயத்தோட படபடப்பை போக்குது, நல்ல ரத்தம் உற்பத்தி ஆகறதுக்கு உதவுது!

இந்த குளியல், மனசோர்வு, கவலை, தூக்கமின்மை எல்லாத்தையும் கூட போக்குதாம் தெரியுமா பங்காளி?

ரொம்ப ஆச்சரியமான தகவல் தான். மேல சொல்லுங்க!

மேல...

என்னாங்க அண்ணா என்னை சொல்லிட்டு, இப்போ நீங்களே விளையாடுறீங்க!

கோபிச்சிக்காத...உன் கூட சேர்ந்தா அந்த விளையாட்டு புத்தி எனக்கும் வந்திடுது...

சரி விஷயத்துக்கு வருவோம்! Osteomalacia, rickets, obesity, insomnia, psoriasis, fatal breast cancer, COPD, psychology depressants, rheumatoid arthritis, lower back ache, osteo arthritis, hemiplegia, scabies, tuberculosis போல நோய்ங்களை குணமாக்குது இந்த சூரியஒளி குளியல். (பங்காளிங்களே மன்னிச்சிடுங்க! இதில இருக்கிற பல வியாதிங்களுக்கு தமிழில என்ன பேருன்னு எனக்கு தெரியல)

சரி! எங்க ஓடறீங்க பங்காளிங்களே!

இப்பவே போய் சூரியஒளி குளியல் செய்திட்டு வந்திடறோம்!

இருங்க! இருங்க! அதிகமா போச்சுன்னா அமிர்தமும் நஞ்சாகும் இல்ல.. அது போல, அதிகமான நேரம் திரும்ப திரும்ப சூரியஒளி குளியல் செய்தா தோல் புற்றுநோய் வரும்ங்கிறதையும் தெரிஞ்சுக்கோங்க.

அப்புறம்! முதலிலேயே, ஏன் நீங்க சொல்லலன்னு சண்டைக்கு வரகூடாது ஆமா...

சரி! நில்லுங்க! போறதுக்கு முன்னாடி ஓட்டு போட்டு கருத்தும் சொல்லிட்டு போங்க!

நீங்க சொன்னது எல்லாம்......

இத பார்றா....சொன்னதை செய்ங்கன்னா, ஒரே ஓட்டமா ஓடறதை.

படிக்கிற நீங்களாவது, ஓட்டு போட்டு, கருத்து சொல்லிட்டு போங்க அப்பு! உங்களுக்கு புண்ணியமா போகும்