பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

02-Oct-2010

எந்திரனைப் பார்ப்போம்! நாட்டையும் நினைப்போம்!


ராசா! வாங்க பங்காளி! இன்னைக்கு எந்திரன் சக்கப்போடு போடுதாமில! ரொம்ப சந்தோஷம்பா!

தல! பட்டையை கிளப்பிட்டீங்க போல!
வாழ்த்துக்கள் தல!
ஆமா ரவி பங்காளி! நம்ப தலைவரு கலக்கி இருக்காருப்பா! ஐயோ! செம தூள்!  Chance-ஏ இல்லப்பா! படம் வர்றதுக்கு லேட்டானாலும் செம லேட்டஸ்டா வந்து தூள் பண்ணிட்டாரு தெரியுமா? எத்தனை முறை வேணும்னாலும் பார்க்கலாம். ஏன் பங்காளி! நீங்க இன்னும் பார்கலைப் போல இருக்கே?

ஆமாம்பா எனக்கும் ஆசையாத்தான் இருக்கு. கண்டிப்பா பார்ப்பேன்! கொஞ்சம் சத்தமெல்லாம் அடங்கட்டும்னு காத்திருக்கேன். கொஞ்ச நாள் கழிச்சி நிதானமா பார்க்கலாம்ன்னு யோசிச்சிட்டு இருக்கேன். அப்போ டிக்கட் விலையும் நார்மலா இருக்குமில்ல.

அதுவும் சரிதான். நம்ப அளவுக்கு நீங்க தீவிரம் இல்லைங்கிற விஷயத்தை நான் மறந்தேப் போயிட்டேன்.

ஆமாங்க ராசா! நாடு முழுக்க இதேப் பேச்சா இருக்கே, அப்புறம், இன்னைக்கு காந்தி பிறந்த நாள். அதை யாராவது ஞாபகம் வைச்சிருக்காங்களாப்பா? நாம யாருமே அதை ஞாபகம் வைச்சிருக்கிற மாதிரியே தெரியலையே! இதை நினைச்சா மனசு சங்கடப்படுது.

ஓ ரவி! இன்னைக்கு காந்தியோட பிறந்தநாளா? அது தான் டாஸ்மார்க் கடை மூடி இருக்கா.  இன்று விடுமுறைன்னு போர்ட் கூட போட்டிருக்காங்க! ஆமாம் அதைப் பார்த்தப்பின்னாடி தான் தெரிஞ்சது.

ஆமாம்பா! ரொம்ப வருத்தமா இருக்கு! இது என்ன ஒரு மோசமான நாகரீகம்னு தெரியலேயேப்பா. நாட்டுக்காக பாடுபட்டு பல தியாகங்களை செய்த நம்ப தலைவருங்களை நினைக்கிறதுக்குக் கூட ஆள் இல்லையேப்பா. அவரு பிறந்தநாளிலக் கூட சினிமா படங்களா போடறான் டீவியில. என்னக் கொடுமை சரவணன்!

நாட்டில இன்னைக்கு இருக்கிற பல அவலங்களுக்கு நாம சரியானபடி நம்ப தலைவருங்களை பத்தி தெரிஞ்சி வைச்சுக்கலைன்னு தான் காரணம் சொல்வேன். 

சினிமாவை பாருங்க! அது நம்ப பொழுதுப் போக்குக்கு முக்கியமான விஷயம்தான். வாழ்க்கையில பொழுதுப்போக்கும் வேணும் தான். அதை வேண்டாம்னு யாரும் சொல்லல. அவங்க நடிப்பை ரசிங்க! அதையும் வேணாம்னு யாரும் சொல்லலை. அதே சமயம் நம்ப நாட்டைப் பத்தியும் நினைக்கணும் இல்லையா?

நாட்டோட எதிர்காலம், ஏன் இந்த உலகத்தோட எதிர்காலமே, இளைஞர்களோட கையில இருக்குன்னு சொல்றாங்க. அந்த இளைஞர்கள் நல்ல சிந்தனைகளை வளர்த்துக்க வேணும் இல்லையா?

வெறித்தனமா நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்களை அமைச்சி, நடிகர்களோட வாழ்கையை மேம்படுத்துறதுதான் தங்களோட வாழ்க்கை இலட்சியம்னு, தங்களோட வாழ்க்கையை பாழாக்கிறவங்க எண்ணிக்கை கூடிக்கிட்டேப் போகுதேப்பா நாட்டில. இந்த அவல் நிலை மாறணுமா இல்லையா ராசா?

ரவி! நீங்க சரியாத் தான் சொல்றீங்க! நீங்க ஒன்னு கூர்ந்துக் கவனிச்சா, ஒரு விஷயம் நல்லா தெரியும், நாம, தலைவர்களை நம்ப மக்களுக்கு அறிமுகம் செய்கிற விதமே தப்பா இருக்கேப்பா. 


காந்தியை பத்தி படிச்சிக்கோ! 5 மார்க் கேள்விகள்ல வரும், பெரியாரைப் பத்தி படிச்சிக்கோ! 10 மார்க் கேள்விகள்ல வரும். இந்தியவிடுதலையைப் பத்தி படிச்சிக்கோ! கட்டுரை டைப் கேள்வியா வரும்ன்னு சொல்லி சொல்லித்தானே வாத்தியாருங்க பாடம் நடத்துறாங்க. இது ரொம்ப தப்பான விஷயம் இல்லையா பங்காளி?

அதனாலத் தான் நாம்ப எல்லோருமே, பள்ளிக்கூடத்தை விட்டதோட நம்ப தலைவருங்களைப் பத்தின நினைப்பையும் விட்டுடறோம். பாடமா படிக்கிறதால அவங்கமேல மதிப்பு வர்றதுக்கு பதிலா வெறுப்பு இல்ல வருது எல்லோருக்கும். மார்க்குக்காக படிச்சா, மார்க்கு வாங்கியப்பின்னாடி அதெல்லாம் பயன் இல்லைன்னு தானே நினைக்கத் தோணும். நீங்களும், நானும் கூட அப்படிதானே படிச்சோம். ஈடுபாட்டோடையா அவங்களைப் பத்தி படிச்சோம்? இல்லையே ரவி! 

ரொம்ப எளிமையா அவங்களைப் பத்தி, கதை வடிவில, நாடகம் வடிவிலன்னு, கலைகள் மூலமா நம்ப தலைவருங்களை, இளைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்ய தவறிட்டோமே. அதோட விளைவு தானே இதெல்லாம்.

சரியா சொல்லிட்ட ராசா! இந்த வீனாப்போனக் கல்வி முறை தாம்பா இதுக்கெல்லாம் காரணம்.


அமெரிக்காவிலப் பாரு ஆப்ரஹாம் லிங்கனை பத்தி, மார்டின் லூதர் கிங்கைப் பத்தி எல்லாம் இன்னைக்கு இருக்கிற பொடிப் பசங்க எல்லாங்கூட நல்லா தெரிஞ்சி வைச்சிருக்காங்க. அவங்கெல்லோரும், அவங்களோட தலைவருங்களைப் பத்தி சொல்லும்போதே பெருமையா சொல்றாங்க. கேட்கிற நமக்கே ரொம்ப ஆச்சரியமா இருக்கு. 


அவங்க கல்வி முறை அந்த அளவுக்கு பக்குவமா அவங்களோட தலைவருங்களை, அவங்ககிட்ட கொண்டுபோய் சேர்திருக்கு.

அதுமாதிரி நம்ப நாட்டிலேயும் உடனடியா கல்வி முறையை மாத்தி சீரமைச்சாத்தான் இதுக்கெல்லாம் ஒரு விடிவுக்காலம் பிறக்கும்ப்பா! அதுவரைக்கும் பெற்றோர்கள் தான், அந்த பொறுப்பை எடுத்துக்கணும். நாட்டுத் தலைவருங்களைப் பத்தி பக்குவமா, தங்களோட பிள்ளைங்களுக்கு சுவாரஸ்யமா எடுத்துச் சொல்லணும்.

ஆமாங்க ரவி! நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை. நான் கூட, நீங்க சொன்ன வழிமுறையை ஃபாலோ பண்ணப்போறேன். இன்னைக்கி உங்ககிட்டப் பேசினதில ரொம்ப நல்ல விஷயம் ஒன்னுத் தெரிஞ்சிக்கிட்டேன். சரி! ரவி வரேன்பா! அப்புறமா சந்திக்கலாம்.


தாத்தா! எந்திரனையும் பார்போம்!
அதேசமயத்தில உங்க பிறந்த நாளையும்
மறக்கமாட்டோம்!

பங்காளி! இந்த ரெண்டு நண்பர்கள் பேசிகிட்டதை கேட்டீங்க இல்ல? நீங்க என்ன நினைக்கறீங்க, அவங்க சொன்ன கருத்தைப் பத்தி? ஒரு வரி சொல்லிட்டுப் போனீங்கன்னா, எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும் சொல்லுங்க!                

இந்த பதிவு எல்லோர்கிட்டேயும் போய் சேறணும்னு நீங்க நினைச்சா, மறக்காம உங்க ஓட்டுகளை, கீழே இருக்கிற ஓட்டுப் பெட்டிகள்ல போடுங்க மக்கா! நீங்க எல்லோரும் தான் அன்பான பங்காளிங்க ஆச்சே! நான் சொல்லாமலே செய்றவங்க இல்லையா அப்பு?
              30-Sep-2010

வேலையில்லா திண்டாட்டமே போ! போ! போ!


குறிப்பு: பங்காளி! காந்தி பிறந்த நாளை முன்னிட்டு இந்த வாரம் முழுசும் காந்திய சிந்தனைகளை பதிவில் போடுறேன். உங்க ஆதரவை நோக்கி நிற்கிறேன்...

தாத்தா! உங்களை எப்பவுமே
மறக்காம இருப்போமாக!

காந்தித் தாத்தா வேலைவாய்ப்பற்ற அவல நிலையை, வறுமையை எப்படி போக்கிடலாம்ன்னு சொல்றாரு பாருங்க! வாங்க! அவரு சொல்றதை கூர்ந்து கவனிப்போம்.

நாம் வறுமையை நோக்கிச் சென்றுக்கொண்டே இருக்கிறோம். அதற்குக் காரணம் என்ன என்றுத் தெரியுமா? நம்முடைய 7 இலட்ச கிராமங்களையும் பாராமுகமாக கவனிக்காமல் விட்டுவிட்டோம். அவைகளை மேலும் மேலும் சுரண்டலுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

வறுமையின் கோரப்பிடியில் இன்றைய இந்தியா! ஒருக் காலத்தில் தேனும் பாலும் ஆறாக ஓடியதாக வரலாறில் படிக்கிறோம். ஆனால் இன்றோ இந்த இழி நிலையில் நாம்!

சில தவறான புரிதல்கள் காரணமாகவே நாம் இந்த வறுமையில் பிடியில் சிக்கி இருக்கின்றோம். நாம் ஒரு விஷயத்தை நன்குப் புரிந்துக் கொள்ள வேண்டும். கிழக்கத்திய நாகரீகத்திற்கும் மேற்கத்திய நாகரீகத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்த வித்தியாசம் எப்படிபட்டதென்று பொதுவாகவே அவ்வளவாக புரிந்துக் கொள்ளப்படவில்லை.

நம்முடைய புவியியல் அமைப்பு, நமது வரலாறு, நம்முடைய வாழும்முறை எல்லாமுமே மேற்கத்திய நாகரீகத்திலிருந்து முற்றிலும் மாறுப்பட்டுள்ளது. நம் நாட்டின் நிலப்பரப்பை கணக்கில் கொண்டால் நம்முடைய ஜனதொகையின் அடர்த்தி அதிகமாக இருக்கிறது. இது மேற்கத்திய நாடுகளுக்கு சிறிதும் பொருந்தாத விஷயமாக இருக்கிறது.  

எங்கே, ஜனதொகையின் நெருக்கடி அதிகமாய் இருக்கிறதோ, அங்கே அந்த நாட்டின் பொருளாதாரமும், நாகரீகமும், அங்கிருக்கும் நிலைக்கேற்பவே இருக்கும். இப்படிபட்ட பிரச்சனைகள் இல்லாத நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாதபடி வேறுபட்டு இருக்கும். இயற்கைக்கு ஏற்புடைய விதி இதுவே.

குறைந்த ஜனதொகைக் கொண்ட அமெரிக்கா போன்ற நாட்டிற்கு, வேலைகளை எளிதில் செய்ய பல விதமான இயந்திரங்கள் தேவைப்படும். இந்தியநாட்டில் கோடிக்கணக்கானவர்கள் வேலையற்று வாடும் நிலையில் உழைப்பைக் குறைக்கும் இயந்திரங்கள் தேவையே இல்லை.

அதிகமானோர் வாழ்வதற்கு வழியின்றித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். விளை நிலத்தின் மீது அளவுக்கும் அதிகமானோர் சார்ந்திருக்கும் அவல நிலையில் தான் நாம் இன்று இருக்கின்றோம். போதுமான சம்பாத்தியம் இல்லாமல் துன்பபடும் கணக்கற்ற ஏழைகள். இது ஒருபுறம் இருக்க, இந்தியாவின் தற்போதைய ஜனதொகையான 35 கோடி (1935 கணக்குப்படி) மக்களுக்கு போதுமானதாக விவசாய விளை நிலங்கள் இல்லையென்று சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

நான் உறுதியாகச் சொல்வேன்! இன்றுக் கிடைக்கக்கூடிய விளைநிலங்களை சரியான முறையில் பயன்படுத்தினால் எல்லோருக்குமே உணவளிக்க முடியும். நாம் அதற்கான வழிவகைகளைக் காணவேண்டும். அவ்வளவு தான்! அதற்கான ஆக்கபூர்வமான சிந்தனைகளும், செயல்திறனும் இருந்தாலே போதுமானது.

இந்த இழிந்த நிலைக்குத் தீர்வாக நான் சொல்வது என்னவென்றால், ஏழை எளிய கிராம மக்களைப் புரிந்துக் கொள்ளுங்கள். உங்களில் ஒருவராக அவர்களை எண்ணுங்கள். அவர்கள் நல்ல முறையில் விவசாயம் செய்து நல்லப் பலன்களை அடைய அவர்களுக்கு உதவுங்கள். நாம் அவர்கள் என்ன விளைவிக்கிறார்களோ அவற்றை மட்டும் நுகர்ந்து திருப்திக் காண்போம். அவர்கள் வாழ்வதுப் போன்றே நாமும் எளிமையாக வாழ்வோம்.

பணக்காரர்கள் தங்களின் தேவைக்கும் அதிகமாய் பொருட்களை சேர்த்துக் குவிக்கின்றனர். அதனால் அவை கவனிப்பாரற்று வீனாகின்றன. அதே சமயம் ஏழைகள் பட்டினியால் அவதியுற்று செத்து மடிகின்றனர். உண்மையான நாகரீகம் என்பது பொருட்களை வாங்கிக் குவிப்பதன்று. அது சுயமாகவே தேவைகளை சுருக்கிக்கொள்ளுதல் ஆகும்.

அப்படி தேவைகளை குறைத்துக் கொண்டோமானால், உண்மை மகிழ்ச்சி - நீடித்த திருப்தி நமக்குள் உண்டாகும். இதுவே நாம் ஆக்கபூர்வமாக சேவை செய்வதற்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் கொடுக்கும். இந்த நிலையை அடைதல் எளிதன்று என்று எனக்கும் நன்றாகவே தெரியும். முதலில் சிந்தனை விதைகள் மனத்தில் தூவி அவை முளைத்து மரமாகும் வரைக்கும் விடாமுயற்ச்சியுடன் முயன்றால் இது கைக்கூடும்.

இயற்கையாய் இருக்கும் வளத்தினை நமக்குள் பகிர்ந்துக்கொண்டால் வறுமையையும், வேலையில்லா திண்டாடத்தையும் எளிதில் போக்கிக் கொள்ளமுடியும்.

திரும்பவும் நாளைக்கும் நம்மிடையே வந்துப் பேச இருக்காருங்க நம்ப காந்தித் தாத்தா.

உங்களுக்கு அவர் சொன்னதைப் பத்தி என்னக் கருத்து இருக்குதுங்க. சும்மா சொல்லிட்டுப்போங்க. உங்க கருத்தைப் பத்தி தெரிஞ்சுக்கிறதில ஒரு ஆர்வம் தான்.

இந்த பதிவு எல்லோர்கிட்டேயும் போய் சேறணும்னு நீங்க நினைச்சா, மறக்காம உங்க ஓட்டுகளை, கீழே இருக்கிற ஓட்டுப் பெட்டிகள்ல போடுங்க மக்கா! நீங்க எல்லோரும் தான் அன்பான பங்காளிங்க ஆச்சே! நான் சொல்லாமலே செய்றவங்க இல்லையா அப்பு?29-Sep-2010

கிராமங்களே எழுந்து நில்லுங்கள்!


குறிப்பு: பங்காளி! காந்தி பிறந்த நாளை முன்னிட்டு இந்த வாரம் முழுசும் காந்தியின் சிந்தனைகளை பதிவில் போடுறேன். உங்க ஆதரவை நோக்கி நிற்கிறேன்...

காந்தி தாத்தா கிராமங்களின் மலர்ச்சிப் பற்றி என்ன சொல்றாரு கேட்போம் வாங்க பங்காளி!

உங்களுக்கு தலை
வணங்குகிறோம் தாத்தா...

 என்னுடைய எண்ணத்தில் கிராம சுயராஜ்ஜியம் என்பது ஒரு முழுமையான குடியாட்சியாகவும், இன்றியமையாத தேவைகளுக்காக வேறு வெளி இடங்களைச் சாராது,   தன்னிச்சையான ஒரு அமைப்பாகவும் இருக்க வேண்டும். அதேப்போல், எங்கு சார்ந்திருத்தல் அவசியமாகிறதோ அங்கு பிற ஊர்களுடன், நகரங்களுடன் ஒத்து உதவி வாழுகின்றதாகவும் அது இருக்க வேண்டும்.

அதனால் ஒவ்வொரு கிராமத்தின் முக்கியமான சிந்தனை தன்னுடைய தேவைக்குத் தகுந்த உணவு தானிய உற்பத்தியும், ஆடைகளுக்குத் தேவையான பருத்தி உற்பத்தியும் எவ்வாறு செய்துக்கொள்வது என்பதனைச் சுற்றியே இருக்க வேண்டும்.

அந்தக் கிராமம், கால்நடைகளை சிறந்த முறையில் பராமரித்துக் கொள்வதாக இருக்கவேண்டும். பெரியவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு தேவையான விளையாட்டு மைதானங்களும், பொழுது போக்கு பூங்காக்களும் கொண்டதாக இருக்க வேண்டும்.

அதிகமாய் இருக்கும் விளைநிலங்களில், கஞ்சா, புகையிலை ஓபியம் தயாரிக்கப் பயன்படும் கசகசா போன்ற போதை பொருட்களைத் தவிர்த்து மற்ற பணப்பயிர்களை விளைவித்துக் கொள்ளும்படி இருக்கும்.

அந்த கிராமத்தில் கிராமிய கலைகளை நடத்துவதற்க்கான ஒரு நாடக அரங்கமும், பள்ளிக்கூடமும், பொது நிகழ்ச்சிகளுக்கான சமூகக் கூடமும் இருக்கும். எல்லா மக்களுக்கும் நல்ல தூய்மையான குடிநீர் வழங்கப்படுவதாகவும் இருக்கும். இந்த திட்டம் சரியானபடி செயல்படுவதற்கு மேல்நிலை தொட்டிகள் மற்றும் கிணறுகள் அமைந்து இருக்கும்.

இந்த கிராமங்களில், பிள்ளைகளுக்கு உயர்நிலை வரையிலும் கட்டாயக் கல்வி ஆக்கப்பட்டிருக்கும். எல்லா செயல்பாடுகளும் கூட்டுறவு முறையில் நடக்கும்படி இருக்கும். இப்போது இருப்பதைப் போன்று தீண்டாமையும் சாதிகளும் இல்லாதிருக்கும்.

கிராம நிர்வாகம் பஞ்சாயத்தினால் நடத்தப்படும். பஞ்சாயத்தில் 5 உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்த உறுப்பினர்கள் வருடத்திற்கு ஒரு முறை தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். வாக்களிக்கப்பவருக்கும் தேர்தலில் நிற்பவருக்கும் குறைந்தப்பட்ச தகுதி இருக்க வேண்டியதாய் இருக்கும்.

சேவை மனம் கொண்ட கிராம சேவகர்கள், கிராமங்கள் மலர்ச்சி பெறுவதற்காக முயல்வார்கள். கிராமங்கள் தங்களின் திறமையை நன்கு வளர்த்துக் கொள்வதால் அவை தயாரிக்கும் பொருட்களுக்கு நல்ல சந்தை உருவாகும்.

ஒவ்வொரு கிராமத்திலும் கிராம கவிஞர்கள், கிராம கலைஞர்கள், கிராம கட்டிட கலை வள்ளுனர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இருப்பர். சுருக்கமாக சொல்வதென்றால் கிராமங்களில் எல்லோருடைய தேவையையும் பூர்த்திச் செய்வதாக எல்லா வளமும் நிறைந்து இருக்கும். 

இன்றைய கிராமங்கள் பார்க்கவே அருவருப்பான குப்பைமேடுகளாக காட்சி தருகின்றன. நாளைக்கு இதே கிராமங்கள், அறிவு மிகுந்தோர் வாழும் சிறிய சிறிய சொர்கங்களாக உருவெடுக்கும். அங்கு வாழும் மாந்தரை யாரும் ஏமாற்றவோ, சுரண்டவோ முடியாது.  

இந்த மாற்றங்கள் அனைத்தும், வாழ்க்கைக்கு உகந்தபடி மாற்றப்பட்ட கல்வி முறையினால் எளிதாக சாத்தியமாக்கப்படும்.

தாத்தா சொன்னதில எது பிடிச்சிருக்கு மக்கா? சும்மா சொல்லிட்டுப் போங்க. நானும் தெரிஞ்சிப்பேன் இல்ல. 

இந்த பதிவு எல்லோர்கிட்டேயும் எளிதா சேர்றதுக்கு வசதியா மறக்காம உங்க ஓட்டுகளை, கீழே இருக்கிற ஓட்டுப் பெட்டிகள்ல போடுங்க மக்கா! நீங்க எல்லோரும் தான் அன்பான பங்காளிங்க ஆச்சே!


இயற்கை வாழ்வியல் முகாமுங்க! நோயில்லாம வாழ வழி இருக்குதுங்க!


October 1ல் - 7 முடிய, 7 நாட்கள் யோக, இயற்கை மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முகாம் நடக்குதுங்க. (Yoga & Naturopathy - Treatment cum Awareness Programme)

அம்மணிக்கு ஆரோக்கியமா வாழற முறைங்க
தெரிஞ்சிருக்குங்கோ....

இந்த ஏழு நாட்களும், அங்கேயே தங்கி உங்க ஆரோக்கியத்திற்கான வழிகளைத் தெரிஞ்சிக்கலாமுங்க. நோய்ங்க ஏன் வருது? அதுங்க நம்மை தாக்காத விதமா எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்றதுன்னு பல பல புது புது விஷயங்க தெரிஞ்சிகலாமுங்க! எல்லோமே செய்முறை விளக்கங்களோட சொல்றாங்க.

வாழையிலை குளியல், மண் குளியல் போல பல குளியல்களை படிச்சீங்க இல்ல! அதெல்லாம் நேரில அனுபவிக்கிற வாய்ப்புங்க.

நேரம் இருக்கிறவங்க மிஸ் பண்ணிடாதீங்க. உங்க வாழ்க்கையையே மாத்திற முகாமா இருக்கலாம். யாருக்குத் தெரியும் சொல்லுங்க பங்காளி! 

இந்த முகாமை நடத்திக் கொடுக்கிறவங்க:

இயற்கை உணவு நிபுணர்: திரு. மூ. ஆ. அப்பன் அவர்கள்

இவரு இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து என்கின்ற புகழ்பெற்ற புத்தகத்தை எழுதி இருக்காருங்க.

இது நடக்குற இடம்: 
இயற்கை வாழ்வு நிலையம் (Natural Life Centre
125, கீழத் தெரு, குலசேகரன்பட்டினம்
தூத்துக்குடி மாவட்டம் - 628206

செல்பேசி: +91 - 9944042986, 9380873645

நன்கொடை: இந்த ஏழு நாட்களும் தங்குற வசதிக்கும், உணவுக்கும், சிகிச்சைக்கும் வெறும் 500/- ரூபாய் தான் கொடுக்கணும்ங்க.

இந்த காலத்தில இவ்வளவுக் குறைவான கட்டணமான்னு மலைப்பு வருதா அப்பு! அது தாங்க மனுஷன நேசிக்கிற குணமெங்கறது. இயற்கை வாழ்வு ஆர்வலருங்க எப்பவுமே எதுக்கும் பேராசைப் படறதில்லைங்க.

இந்த இடம் இயற்கை சூழலிலே, கடற்கறைக்கு பக்கத்தில அமைஞ்சிருக்கு. நினைக்கும் போதே ஜாலியா இருக்கு இல்ல! JJJ

இந்த இடம், 3 ஏக்கர் நிலமுங்க. முழுசுமே பழ முதிர் சோலையா, வெறும் இயற்கை விவசாய முறையில மட்டுமே மரங்களை வளர செய்திருக்காங்க. கற்பணை செய்யும் போதே ரொம்ப நல்லா இருக்கில்ல அப்பு? 

இன்னொரு முக்கியமான தகவல் சொல்றேன் கேளு அப்பு!

ஒவ்வொரு மாசமும் 3வது வாரம் வெள்ளி, சனி, ஞாயிறுன்னு 3 நாட்கள் முகாம் நடத்துறாங்க. இந்த நவம்பர் மாசத்தில ஒரு முகாம் நடத்துறாங்க.

முகாம் 19-ம் தேதி காலையில தொடங்கி 21-ம் தேதி மாலை 6 மணிக்கு முடியும். வெளியூர்ல இருந்து வர்றவங்க முதல் நாளே வந்திடலாம். அதேப் போல கிளம்பறதும் முகாம் முடிஞ்ச மறுநாள் கூட கிளம்பி வரலாம்.

இதுக்கு நன்கொடை வெறும் 500 ரூபாய் மட்டுமே. பங்காளிகளே! உங்களுக்கு யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கோ அவங்க கட்டாயம் கலந்துக்கிட்டுப் பயன் அடையுங்க அப்பு!

வேற ஏதாவது நோய் இருந்தாலும் தொடர்ந்து சிகிச்சை தர்றாங்க அப்பு! உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் சொல்லுங்க. 

உங்க புண்ணியத்தோட அகௌண்ட்ல கொஞ்சம் சேர்த்துகிடுங்க.


காந்தி பெண்களை பற்றி என்னா சொல்றாருன்னா...


பங்காளிகளே வாங்க! காந்தித் தாத்தா என்ன சொல்றாரு கேட்போம்!

தாத்தா...! நல்லா இருக்கீங்களா?

பெண்கள் நீண்ட காலமாகவே அடிமைப்பட்டு கிடக்கிறார்கள். ஆண்களே எல்லா சட்டதிட்டங்களையும், சம்பிரதாயங்ககளையும் தீர்மானித்த நிலைதான் நாம் வரலாற்றில் பார்க்கிறோம்.

அஹிம்சையை மையமாகக் கொண்ட வாழ்க்கைமுறையில், ஆணுக்கு, தன்னுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கும் உரிமை எவ்வளவு இருக்குமோ, அதே அளவு பெண்ணுக்கும் தன்னுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கும் உரிமை இருக்கும்.

அஹிம்சை கடைப்பிடிக்கப்படும் சமூகத்தில், கடமை செய்தலின் பலனே உரிமையாகப் பெறப்படுகிறது. அந்த சமூகத்தில் உறவுகளுக்கு மத்தியில் நிலவும் சட்டதிட்டங்கள் எல்லோரின் ஒத்துழைப்பு மற்றும் ஒப்புதலின் பேரிலேயே இயற்றப்படுகிறது. எந்த சட்டமும் வெளியிலிருந்து திணிக்கப்படமாட்டாது.

ஆண்கள், பெண்களிடம் கொள்ளும் உறவுமுறையில், இந்த உண்மையின் சாரத்தை முழுதுமாக விளங்கிக்கொள்ளவில்லை. அவர்கள், பெண்களுக்கு எஜமானர்கள் போலவும், பிரபுக்கள் போலவும் தங்களை நினைத்துக்கொள்கிறார்கள். சரியாக சொல்வதென்றால், அவர்கள் நண்பர்கள் போலவும், உடன்பணிபுரிவோர் போன்றே பெண்களிடம் நடந்துக்கொள்ள வேண்டும்.

பெண்கள் எல்லோரும் பலகாலமாக அடிமைப்பட்ட கிழவனைப்போன்றே இருக்கிறார்கள். அவன் தான் அடிமை நிலையிலிருந்து விடுதலை அடைய முடியுமென்றே தெரியாத நிலையில், நம்பிக்கையற்ற நிலையில் இருக்கிறான்.

விடுதலைக்கிடைத்த நொடியில், அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் போய்விடுகிறது. பெண்களும், அவ்வாறே பலகாலமாக ஆண்களுக்கு அடிமைகள் என்றே தங்களைக் கருதிக் கொள்ளுமாறு அறிவுருத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர்.

அரசாங்கத்தில் இருப்போர் பெண்களுக்கு சம வாய்ப்புகளைக் கிடைக்கச் செய்யவேண்டும். அப்போது பெண்களும் ஆண்களுக்கு சமமாக தங்களின் பணிகளைச் செய்வர்.

எல்லோரும் மனம் வைத்தால், இந்த புரட்சியை நடைமுறை சாத்தியமாக்குவது மிகவும் எளிய ஒன்று தான். அரசாங்கத்தில் இருப்போர், தங்களின் வீடுகளில் இருந்தே இதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும். 

மனைவிமார்களை பொம்மைகள் போன்றும், போகபொருட்கள் போன்றும் நடத்தப்படாதவாறு இருக்கட்டும். பொது சேவையில், ஆண்களுக்கு நிகராக மரியாதைக்குரிய தோழர்களாக மதிக்கப்படட்டும். இதற்காக போதுமான கல்வியறிவு பெறாத பெண்கள் தங்களின் கண்வன்மார்களிடமிருந்து கல்வியறிவு பெறட்டும். போதுமான கல்வியறிவு பெறாத அன்னையர்களுக்கும், மகள்களுக்கும் கூட இதுப் பொருந்தும்.

சட்டதிட்டங்கலும், சம்பிரதாயங்கலும் பெண்களுக்கு எதிராகவே இருக்கும் போக்கு நாடு முழுதுமே காணப்படுகிறது. இந்த நிலை உடனே கலையப்படவேண்டும்.

குறிப்பு: பங்காளிகளே! காந்திய சிந்தனை வாரமாக, இந்த வாரம் முழுதும் காந்தியக் கருத்துக்களை பதிவுகளாக இட உள்ளேன். படித்துப் பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை இடுங்கள்! ஆதரவைத் தாருங்கள்!

புதிய உலகத்தை நோக்கி நாம் பயணப்படலாம்! வாங்க ஒன்னா கைக்கோத்துக்கிட்டு வாங்க!


27-Sep-2010

வினோத அனுபவங்கள் -2 : அமைதி பயணி


Peace Pilgrim - அமைதிப் பயணியை பற்றிய எல்லா பதிகளும் படிக்க இங்கே அழுத்தவும்

அனுபவங்களை சொல்லிக்கொண்டு
இருப்பவர் - அமைதிப்பயணி

என்னைப் பார்த்து பலர் கேட்கும் ஒரு சந்தேகம், எப்படி இவ்வளவு தூரம் பாதயாத்திரை செல்ல, உங்களுக்கு சக்தி கிடைக்கிறது என்பது தான். அவர்களுக்கு நான் சொல்லும் பதில் என்னவென்றால், இவ்வளவு ஆற்றல் ஏதோ, எல்லோருக்கும் இளமைக் காலத்தில் இயல்பாகவே தோன்றுகின்ற சக்தி அல்ல இது. 


இந்த அளவில்லா சக்திக்குக் காரணம் என்னவென்றால், என்னுள், உள் அமைதி மூலம் தோன்றும் முடிவில்லா ஆற்றல், தடையின்றி, இயல்பாகவே ஊற்றெடுத்து பொங்குகிறது.

நீங்கள் கடவுளின் கருவியாகி, கடவுளின் பணியை செய்யும் போது, உங்களுக்கு எந்த ஒரு இடையூறும் நேராது. ஏனெனில் கடவுள் உங்களின் மூலம் பணியை செய்கிறார். நீங்கள் வெறும் கருவி தான். கடவுள் என்ன செய்ய முடியுமோ, அவற்றுக்கு எந்த எல்லையும் இல்லை. நீங்கள் கடவுளுக்காக காரியங்கள் செய்தால், நீங்கள் போராட வேண்டி இருக்காது. நீங்கள் அமைதியும், நிதனாமும், முடிவில்லா ஆற்றலும் கொண்டவராக இருப்பீர்கள்.    

என்னுடைய யாத்திரை ஒரு போராட்டாம் அன்று. போராட்டம் வன்முறையின் பிள்ளை. மக்கள் மீது எதனையும் தினிக்கும் முயற்சி எதுவும் இதில் இல்லை. இந்த எனது யாத்திரை, பிராத்தனையின் வடிமாக இருக்கிறது. பிறருக்கு உதாரணமாக இருக்கும் ஒன்றாகவும் இருக்கிறது.

என்னுடைய நடைப் பயணம், அமைதிக்கான பிராத்தனையாகும். நீங்கள் உங்கள் வாழ்க்கையை பிராத்தனையாக அற்பனித்தீர்கள் என்றால், அந்த பிராத்தனை எல்லா எல்லைகளையும் கடந்த ஒரு நிலைக்குக் சென்றிருக்கும். இதனை நான் என் வாழ்க்கையின் சத்தியமாகவே காண்கின்றேன்.

இந்த யாத்திரையை நான் மேற்கொள்ளும் போது, என்னை நான் ஏதோ தனியாக நடந்து செல்லும் ஒரு பெண்ணாக எண்ணுவதேயில்லை. அதற்கு மாறாக, அமைதிக்காக கெஞ்சிக் கதறும் இந்த பூமித்தாயின் இதயத்தின் வடிவமாகவே என்னைக் காண்கின்றேன். மனித இனம் தவறி கீழே விழுந்துவிடுமோ என்கின்ற பயத்துடனேயே அந்தரத்தில் இருக்கும் கத்திமுணைப் போன்ற கூரான பாதையில் நடந்துக் கொண்டிருக்கிறது.


ஒரு பக்கம் குழப்பமும் பயமும், வேதனைகளும் நிறைந்த நரகம் காத்திருக்கிறது. மறுபக்கம் மொத்த மனித இனத்தையே தெய்வ நிலைக்கு உயர்த்தும் உன்னதப் பாதை காத்திருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவெனில், அந்த பயங்கரமான நரகத்தை நோக்கித் தான் இன்று, உலகத்தில் உள்ள எல்லா பெரிய சக்திகளும் இழுக்கின்றன. ஆனால் மனிதர்களே! மனம் தளராதீர்கள். நம்பிக்கையின் ஒளி பிரகாசமாகவே இருக்கிறது.     

சிலரின் ஓய்வில்லாத சேவையைக் கண்டு நான் இப்போதும் நம்பிக்கை கொள்கிறேன். இன்றைய நிலையில் மனித குடும்பம் இருட்டில் குருட்டுத்தனமாக அமைதிக்காக தேடி அலைந்துக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.


இந்த சோர்வளிக்கும் உண்மை ஒரு பக்கம் இருந்தபோதிலும், ஒட்டுமொத்த மனித சமூகத்தின் இதயத்தில் அமைதிக்கான ஆசையே நிறைந்திருப்பதைக் கண்டு நான் நம்பிக்கை கொள்கிறேன். 

என்னுடைய யாத்திரை என் சகோதர சகோதரிகளிடம் அமைதிப் பற்றி பேசுவதற்கான ஒரு வாய்ப்பு. என்னுடைய யாத்திரை ஒரு தவம்! உலகத்தில் நிலவும் இன்றைய துக்ககரமான சூழ்நிலைக்கு நானும் ஏதோ ஒரு வகையில் என்னுடய செய்கைகளினால் காராணமாக இருந்திருக்கின்றேன். அதற்கான பிராயசித்தம் தான் இந்த யாத்திரை.

போர்களினால் ஆறாத இரணங்களைப் பெற்று துனபப்படும் இந்த பூமி, எந்த வழியிலாவது முழுமையான அழிவிலிருந்து விலகி, அமைதிப் பாதைக்கு திரும்புவதற்காக எனது இந்த யாத்திரை, ஒரு பிராத்தனை! என்னுடைய இலட்சியம் பிறர் தம்முள் உள் அமைதி பெற்று, அதன் பயனாக உலக அமைதியைக் கொண்டுவருதலேயாகும். 

நான் உள் அமைதியை கண்டுப்பிடிக்க முடிந்ததென்றால், உங்களாலும் அது முடியும். அமைதிக்கான நேரம் வந்திருக்கிறது. இதனை தவறவிடக்கூடாது! 

அமைதி தூதுவர் - ஆப்ரஹாம் லிங்கன்


பங்காளி! இன்னமும் நமக்கு நிறைய சொல்ல இருக்காங்க...

சொன்னது வரைக்கும், உங்களை எந்த விதத்தில பாதிச்சதுன்னு சொல்லிட்டுப் போங்களேன் மக்கா!

26-Sep-2010

ஜோக்ஸ்! வாங்க! சிரிச்சிட்டுப் போகலாம் வாங்க!


ராமு: வக்கிலுங்க கிட்டேயும் டாக்டருங்க கிட்டேயும் உண்மையை சொல்லணும்னு ஏன் சொன்னாங்க தெரியுமா?

சோமு: ஒரு வேலை, நம்ப கிட்ட எவ்வளவு பணம் இருக்குதுங்கற உண்மை தெரிஞ்சப்பின்னாடி அதுக்கேத்தமாதிரி வேலை செய்வாங்களோ என்னமோ?

வாய்விட்டு சிரிச்சிடுங்க!
இறுக்கமெல்லாம் போய்விடுங்க.

ராமு: சரி! கோழியில இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில இருந்து கோழி வந்ததா?

சோமு: கோழியில இருந்து தான் முட்டை வந்தது. ஏன்னா, முட்டையில இருந்து சேவல் வர்றதுக்கும் வாய்ப்பு இருக்கே

ராமு: சரி! ஒருத்தன் 8 அடிக்கு ஃப்ளூட் ஒன்னு செய்தான். அதுக்கு என்ன பேரு வைச்சான் சொல்லு?

சோமு: அது பெரிசா இருந்ததாலே புல்லாங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் குழல்ன்னு பேரு வெச்சிருப்பான். ஜோக் புரியலையா புல்Long குழல். இப்போ புரிஞ்சதா?

ராமு: ஒரு தத்துவம் சொல்றேன் கேளு! 
மெயில்ல (Train) மயிலை ஏத்தலாம்; அது தாங்கும். ஆனா மயில்ல மெயில் ஏத்தினா அது தாங்குமா? அது செத்துடும்.

சோமு: நானும் ஒரு தத்துவம் சொல்றேன் கேளு!

எருமை மேல சவாரி செய்றவன் எமன்.
புருஷன் மேல சவாரி செய்றவ வுமன்

ராமு: பொம்பளைங்க எல்லாம் சேர்ந்து உன்னை அடிக்க வரப்போறாங்க பாத்து பேசுப்பா!
சோமு: அப்படி வந்தா சரணாகதி தான். சட்டுனு அவங்க கால்ல விழுந்திட மாட்டேன்.
ராமு: நீ செய்தாலும் செய்வே சரி! இந்த பஞ்ச் டயலாக்கை கேளேன்!

பறந்து பறந்து அடிச்சா, அது ரஜினி
மறந்து மறந்து அடிச்சா, அது கஜினி

சோமு: சூப்பரு!

ராமு: ஒரு பெரியவரு, கையில கொம்பு வைச்சிட்டு, கல்யாண சத்திரத்தை சுத்தி சுத்தி வந்திட்டே இருந்தாராம் எதுக்கு சொல்லு சோமு?

சோமு: இது ரொம்ப சிம்பிள்! கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்து பயிருன்னு சொல்லுவாங்க இல்லை. அதனால காக்கா குருவி ஓட்டுறதுக்காக இருக்கும்.

அதை இப்படியும் சொல்வாங்க தெரியுமா? கல்யாண சத்திரத்தில, ஆடு மாடுங்களை உள்ளே விடமாட்டாங்க. ஏன்னா? கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்து பயிரு. அதை, இதுங்கல்லாம் மேய்ஞ்சிட்டு போயிடக்கூடாது இல்ல.

ராமு: ஆட்டோ ட்ரைவர் எதை ஓட்டுவாரு?
சோமு: ஆட்டோ ஓட்டுவாரு

ராமு: பஸ் ட்ரைவர் எதை ஓட்டுவாரு?
சோமு: பஸ்சை ஓட்டுவாரு

ராமு: ட்ரைன் ட்ரைவர் எதை ஓட்டுவாரு?
சோமு: ட்ரைன் ஓட்டுவாரு

ராமு: சரி! அப்போ ஸ்க்ரு ட்ரைவர்???...


ரெண்டு அக்காங்க பேசிக்கிறாங்க!

விமலா: உன் புருஷன் தங்கமானவருன்னு சொன்னே!
கமலா: ஆமாம் சொன்னேன்.
விமலா: அதுக்காக அவரு பாதுகாப்பா இருக்கணும்னு, அவரை பீரோல வைச்சிப் பூட்டுறது, கொஞ்சம் கூட நல்லா இல்ல.

விமலா: எங்க விட்டில இன்னைக்கி விலை உயர்ந்த சமையல்ப்பா!
கமலா: அப்படி என்னப்பா செய்தே?
விமலா: 22 கேரட்ல பொரியலும், 18 கேரட்ல குழம்பும் வைச்சேன்

தங்கமணி: என்னங்க! ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
ரங்கமணி: டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்.குறிப்பு: ஜாலியா சிரிங்க! ஜாலியா ஜோலியைப் பாருங்க! சில ஜோக்ஸ் எப்பவோ எங்கேயோ படிச்சது. பெயர் தெரியாத, முகம்தெரியாத ஜோக்ஸ் எழுத்தாளர்கள், சமூகத்துக்கு நல்லா சேவைச் செய்றாங்கப்பா! எழுதிய புண்ணியவான்க எல்லோருக்கும் தேங்க்ஸ்ங்கோ!


படிச்சதைப்பத்தி என்ன நினைக்கறீங்க! படிச்சதில பிடிச்சது எதுங்க! கொஞ்சம் கருத்து சொல்லிட்டுப் போங்க! ஆங்...அப்படியே ஓட்டுப் போட மறக்காதீங்க! மறுபடியும் சந்திக்கலாமுங்க!